செர்டாங், அக். 30-

இத்தீபத் திருநாளை வசதி குறைந்தவர்கள் எவ்வித தடையுமின்றி கொண்டாடுவதற்கு ஏதுவாக மஇகா பாங்கி தொகுதி இங்குள்ள 102 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியது.

மஇகா பாங்கி தொகுதி தலைவர் ராஜூ சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு பேரங்காடியில் பொருட்களை வாங்குவதற்கான 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள், 100 வெள்ளி ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

இவற்றை மஇகா பாங்கி தொகுதி நிரந்தர தலைவர் டத்தோ நா. ரவிச்சந்திரனும் இத்தொகுதியின் உதவி தலைவர் டத்தோ புருஷோத்தமனும் ஏற்பாடு செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் இவ்விருவரும் நேரடியாக வழங்கி அனைவரிடத்திலும் தீபாவளி குதூகலத்தை ஏற்படுத்தினர்.

பற்றுச் சீட்டுகள் மற்றும் தீபாவளி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்ட அனைவரும் பாங்கி நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் .

இந்தப் பற்றுச் சீட்டுகள் மற்றும் தீபாவளி அன்பளிப்புகள் தீபாவளியை குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு உதவும் என்று ராஜூ சுந்தரம் தனது உரையில் குறிப்பிட்டார்.

“மஇகாவோடு இணைந்திருங்கள். வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம்” என்றார் அவர்.

சிரமப்படும் மக்களுக்கான உதவிகள் இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நிகழ்ச்சியில் பேசிய மஇகா பாங்கி தொகுதி துணைத் தலைவர் என். குபேரன் தெரிவித்தார்.

“உங்கள் நண்பர்கள், உறவினர்களை மஇகாவில் இணைத்து விடுங்கள். கல்வி, சமூகம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் உங்களுக்கு க் கைகொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார் ம இகா சிலாங்கூர் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான குபேரன்.