கோலாலம்பூர், நவ. 4-
நாட்டில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களுக்கு உள்நாட்டு தொழிலாளர்களுக்கு ஈடான சலுகைகள் வழங்கப்படுவது குறித்து மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கேள்வி எழுப்பியிருப்பது சற்றும் நியாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் வேலை செய்யும் லட்சக்கணக்கான அந்நிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதற்காகும் என்று ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.
இவர்களுக்கு ஓய்வூதிய நிதி கட்டாயப்படுத்துவது அனைத்துலக தரத்திற்கு ஏற்ப நியாயமான தொழிலாளர் சந்தையை உருவாக்க உதவும் என்றார் சார்லஸ் சந்தியாகோ.
“அந்நிய தொழிலாளர்கள் நாட்டில் நியாயமுடன் நடத்தப்படுவதையோ அல்லது மலேசியர்கள் அனுபவிக்கும் சலுகைகளை இவர்கள் அனுபவிப்பதையோ காண வீ விரும்பவில்லை போலும்” என்று அறிக்கை ஒன்றின் வழி சார்லஸ் சந்தியாகோ சுட்டிக் காட்டினார்.
1955 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் அந்நிய தொழிலாளர்களுக்கும் மலேசிய தொழிலாளர்களுக்கும் சரிசமமான தொழிலாளர் பாதுகாப்பு வழங்க வகை செய்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.