ஈப்போ, ஜன. 1-நாட்டில் உள்ள இந்திய அரசு சாரா மற்றும் இந்து சமய அமைப்புகளுக்கு பிரதமர் துறை வாயிலாக கடந்த ஈராண்டுகளில் ஒரு கோடி வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசு சாரா மற்றும் சமய அமைப்புகளின் தேவைகளுக்கு தொடர்ந்து நிதி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் கூறினார்.

இங்கு நடைபெற்ற அருணகிரிநாதர் மன்றத்தின் ஏற்பாட்டிலலான அருணகிரிநாதர் விழாவில் சிறப்பு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இந்து சங்கம் நடத்திய திருமுறை விழாவிற்கு 2 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி வழங்கியுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

ஈப்போ அருணகிரி நாதர் மன்றத்தின் ஏற்பாட்டில் 16ஆவது ஆண்டாக அருணகிரி நாதர் நிகழ்வு கடந்த 31 ஆம் தேதி தொடங்கி இன்று  ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

மலேசிய முருகபக்தி பேரவையின் தேசியத் தலைவரும், ஈப்போ அருணகிரிநாதர் மன்றத் தலைவருமான மகப்பேறு மருத்துவர் வ.ஜெயபாலன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

அருணகிரிநாதர் விழா  கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 4ஆம் தேதி வரை பத்து நகரங்களில் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் ஈப்போவில் டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை நிறைவுற்றது.

இவ்விழா ஈப்போ, அருள் மிகு தண்டாயுதபாணி ஆலய திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. அருணகிரி நாதர் திருஉருவச்சிலை அரசு மரத்தடி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்வை முன்னிட்டு ஈப்போவில் டிசம்பர் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு “அமுதம்” சமய பண்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.

இவ்வகுப்புகள் பொற்கிழிக்கவிஞர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றன.

இம்முறை நடைபெற்ற அருணகிரிநாதர் விழாவில் சிறப்பு பிரமுகர்களின் திருப்புகழ் சொற்பொழிவுகள், இசை வழிபாடு, திருப்புகழ் நாட்டிய நாடகங்கள் என்று முத்தமிழும், முருக பக்தியும் சங்கமிக்கும் ஆன்மீக பெருவிழாவாக நடைபெற்றது.