Homeமலேசியாகல்விகுருகுலம் & சூரியன் தங்கும் விடுதி கட்டட நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி!

குருகுலம் & சூரியன் தங்கும் விடுதி கட்டட நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி!

கெர்லிங், மார்ச் 22-கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் குரு குல ஆசிரம மாணவர்கள் மற்றும் இடைநிலைப் பள்ளியில் பயிலும் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் முயற்சியாக புதிய கட்டிடம் வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டடத்தின் விலை 4 லட்சம் வெள்ளி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நிதி திரட்டும் பொருட்டு நாளை மார்ச் 23ஆம் தேதி இரவு மணி 7.00க்கு கெர்லிங், பெர்சத்துவான் குவாங் தொங் & குவாங் சாய் மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வறுமை மற்றும் இதர சூழல் காரணமாக ஆரம்பக் கல்வி பயில்வதில் சிரமத்தை எதிர்நோக்கிய மாணவர்களை தங்க வைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பள்ளியின் தலைமை ஆசிரியராக குமார் சிதம்பரம் கடந்த 2013 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை இவர் மேற்கொண்டார். இதன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு பள்ளி மேலாளர் வாரியம் அமைக்கப்பட்டது.

அதே வருடம் லெம்பா பெரிங்கினில் பங்களா வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு ஆண்கள் தங்கும் இடமாக அமைக்கப்பட்டது.

வறியநிலை மற்றும் குடும்ப பின்னணி காரணமாக ஆரம்ப கல்வியைத் தொடர இயலாத மாணவர்களுக்கு தங்குமிடமும் கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் பயில்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.

எனினும், லெம்பா பெரிங்கின் அதிக தூரத்தில் இருந்ததால் மாணவர் தங்கும் விடுதியை பள்ளி வளாகத்திலேயே அமைப்பதற்கு பள்ளி வாரியம் முடிவு எடுத்தது.

2018ஆம் ஆண்டில் அப்போதைய உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி துறை துணை அமைச்சருமான டத்தோ ப. கமலநாதன் 150,000 வெள்ளி மானியமும் பள்ளி மேலாளர் வாரியம் நிதி வசூல் மூலம் 1லட்சம் வெள்ளியும் வழங்கியதைத் தொடர்ந்து தங்கும் விடுதி பள்ளி வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதியிலிருந்து மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படிக்கத் தொடங்கினர்.தற்போது இடைநிலைப் பள்ளியில் பயிலும் இவர்கள் அனைவரும் கெர்லிங் நகரில் மைகீத்தா சூரியன் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றனர்.

இந்த விடுதி பள்ளி மேலாளர் வாரிய துணைத் தலைவர் கனக ராஜா அழகேசன் பொறுப்பில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆசிரமத்தில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகள், விளையாட்டு, தேவார வகுப்பு என பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தலைவர் ஜமாலுதீன் அப்துல் ரஹ்மான் தலைமையிலான பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அறியப்படுகிறது.

தங்குமிடத்தில் இருக்கும் மாணவர்களுக்கான பள்ளிச் சீருடை, உணவு பாடநூல்கள், கூடுதல் வகுப்புகள், கணினி வகுப்பு, மருத்துவம், போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் பள்ளி மேலாளர் வாரியம் ஏற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினருமான கனகராஜா விவரித்தார்.

மாணவர்கள் தங்கி வரும் இவ்விரு விடுதிகளுக்கும் மாதம் ஏறத்தாழ 16 ஆயிரம் வெள்ளிக்கு மேல் செலவாகும் என்றார் அவர்.

இவ்விரு ஆசிரமங்களையும்

சேர்ந்த மாணவர்களை ஒரே ஆசிரமத்தில் தங்க வைப்பதற்கு புதிய கட்டடம் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கெர்லிங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய தலைவர் குமரன் மாரிமுத்து தெரிவித்தார்.

ஆகையால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேராதரவு தரும்படி நல்லுள்ளங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புக்கு கனகராஜா 012-4416712,குமரன் 013-3615575.

 

 

spot_img

latest articles

explore more