Homeமலேசியாபத்து காஜா வட்டாரத்தின் ஐந்து ஆலயங்களுக்கு நிரந்தர தீர்வு! -டத்தோ சிவநேசன் தகவல்

பத்து காஜா வட்டாரத்தின் ஐந்து ஆலயங்களுக்கு நிரந்தர தீர்வு! -டத்தோ சிவநேசன் தகவல்

பத்து காஜா:

பத்து காஜா வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஐந்து இந்து ஆலயங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அவற்றை அரசாங்கம் ஒதுக்கியுள்ள பூசிங் எனும் இடத்தின் அருகே உள்ள பாப்பான் எனும் இடத்தில் உள்ள பிரதான சாலையோரத்தில. 3 ஏக்கர் நிலத்தில் இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கு நான்கு ஆலய நிர்வாகங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அரசு நில அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆலய நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்கள் வழிபாடு நடத்தி வரும் இடங்களின் சட்டநிலை ஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சில ஆலயங்கள் அரசுக்குச் சொந்தமான நிலங்களிலும், சில சுகாதாரத் துறைக்குச் சொந்தமான நிலங்களிலும், சில நகராண்மைக் கழக நிலங்களிலும், மேலும் ஒரு ஆலயம் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்திலும் அமைந்துள்ளன என்றார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக, ஐந்து ஆலயங்களையும் ஒரே வளாகத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள புதிய நிலத்திற்கு மாற்றி, ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனித்தனி நிலப்பகுதியுடன் பட்டா வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இடமாற்றத் திட்டத்தில் கோவில் தேவகாளி பைரவர் , கோவில் ஸ்ரீ மாகாளியம்மன் , பேச்சியாயி அம்மன் , கோவில் ஸ்ரீ மதுரை வீரன் கோவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆகிய ஐந்து ஆலயங்கள் இடம்பெற்றுள்ளன.

நில ஒதுக்கீட்டின் அடிப்படையில், கோவில் தேவகாளி பைரவருக்கு சுமார் 12,000 சதுர அடி நிலமும், கோவில் ஸ்ரீ மாகாளியம்மனுக்கு சுமார் 11,000 சதுர அடி நிலமும் வழங்கப்படவுள்ளது. மற்ற மூன்று சிறிய ஆலயங்களுக்கு தலா 2,500 முதல் 3,500 சதுர அடி வரை நிலம் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து ஆலயங்களும் ஒரே வளாகத்தில் அமைக்கப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் திருவிழாக்கள், காவடி, ஊர்வலங்கள் உள்ளிட்ட மத நிகழ்வுகளை பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடத்த முடியும். மேலும், சாலை ஒதுக்கீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐந்து ஆலயங்களில் நான்கு ஆலய நிர்வாகங்கள் புதிய இடத்திற்கு இடம்பெயர ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், ஜாலான் பூசிங்கில. உள்ள மதுரை வீரன் ஆலய நிர்வாகம் தற்போதைய இடத்திலேயே தொடர விரும்புவதாகவும் புதிய இடத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்துள்ளதாக டத்தோ சிவநேசன் கூறினார்.

இருந்தபோதும் அந்த ஆலயத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் முடிவை தெரிவிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் எழுத்துப்பூர்வமாக அனைத்து ஆலய நிர்வாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த ஆலயம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், பின்னர் ஏற்படும் நடவடிக்கைகளுக்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்திற்கே உரியது என்றும் அவர் எச்சரித்தார்.

“பேராக் மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட எந்த ஆலயமும் மாற்று நிலம் வழங்காமல் அகற்றப்படாது என்பது அரசின் நிலைப்பாடு. ஆனால், அரசாங்கம் வழங்கும் மாற்று நிலத்தை ஏற்க மறுத்தால், அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்,” என்று டத்தோ அ. சிவநேசன் வலியுறுத்தினார்.

இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நான்கு ஆலயங்களும் எதிர்காலத்தில் 100 ஆண்டுகள், 200 ஆண்டுகள் என்ற கால அளவிலும் எந்தவித அச்சமும் இன்றி, சட்டப்பூர்வமான பட்டாவுடன் நிரந்தர வழிபாட்டுத் தலங்களாக இயங்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்குப் பின்னர் டத்தோ அ. சிவநேசன் ஐந்து ஆலயங்களுக்கு நில ஒதுக்கீடு செய்த நிலத்தையும் மற்றும் ஆலயங்களையும் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more