செவ்வாய்க்கிழமை, ஜூலை 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மகாதீரை எதிர்க்கவே ஆர்சிஐ தோற்றுவிக்கப்பட்டுள்ளது
முதன்மைச் செய்திகள்

மகாதீரை எதிர்க்கவே ஆர்சிஐ தோற்றுவிக்கப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-
பேங்க் நெகாராவின் அன்னிய செலவாணி வணிகத்தில் ஏற்பட்ட இழப்புகளை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வருகின்ற பொதுத் தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை எதிர்ப்பதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு உதவுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

இந்த விசாரணையை மூன்று மாதங்களில் அந்த ஆணையம் முடிக்க வேண்டும் என்று காலவரையறை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தாம் நம்புவதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டார். நேற்று ஆர்சிஐ உறுப்பினர் பெயர்களை அறிவித்த அரசாங்கம் அது மூன்று மாதங்களில் பேரரசரிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே, தேர்தல் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கும் சாத்தியம் இருப்பதாக லிம் கூறினார்.

1999-இல் மகாதீர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்தது போல் நஜீப்பும் செய்யக்கூடும் என கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார். பல அண்டுகளுக்கு முன்னால் டாக்டர் மகாதீர் ஆட்சியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் மீது இப்போது விசாரணை செய்வது நஜீப்பின் பழி வாங்கும் எண்ணத்தைக் காண்பிப்பதாக மகாதீரும் அவரின் ஆதரவாளர்களும் குற்றஞ்சாட்டுகிறார்கள். அது 1எம்டிபி ஊழலிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி என்றும் அவர்கள் கூறுகின்றனர். 1எம்டிபிமீதுதான் ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
இதே கருத்தையே லிம்மும் எடுத்துரைத்தார். கால் நூற்றாண்டுக்கு முன்பு பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி இழப்புகளில் ஏற்பட்ட இழப்பு குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், பணக் கையாடலில் உலக அளவில் மலேசியாவைப் பிரபலப்படுத்தியுள்ள 1எம்டிபி குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை இல்லாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது நஜீப், அமைச்சரவை, அவரின் சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் அதிகாரமீறலுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு. நஜீப்பும் அவரது அமைச்சரவையும் 1எம்டிபி ஊழல்மீதும் ஒரு ஆர்சிஐ அமைத்து அதன் விசாரணையும் மூன்று மாதங்களில் முடிவுக்கு வர வேண்டும் எனக் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென கிட் சியாங் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன