விரக்தியால் நஜீப்பை துன் மகாதீர் வீழ்த்த துடிக்கிறார்!

0
3

கோலாலம்பூர், ஜூலை 19 –
தனது மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் அரசியலில் மேல்நிலையை எட்ட முடியாத அதிருப்தியால் துன் டாக்டர் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்ற துடியாய்த் துடிப்பதாக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் குற்றம் சாட்டினார்.

தமது மகனை எந்த வகையிலாவது அரசியலில் மேல்மட்டப் பதவிக்கு அமர்த்த நினைக்கும் மகாதீர், தமது முன்னைய கொள்கைகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்திருப்பதாக அவர் கூறினார்.

தமக்கு முன்னாளில் இருந்த துன் அப்துல் ரசாக்கின் மகனான நஜீப், துன் ஹுசெய்ன் ஓனின் மகனான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேய்ன் மற்றும் துன் அப்துல்லா படாவியின் மருமகனான கைரி ஜமாலுடின் ஆகியோர் கட்சியில் சிறந்த இடங்களைப் பெற்றிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகாதீர் அரசை எதிர்த்து வருகிறார்.

2008ஆம் ஆண்டு நடந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் தேர்தலில் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கைரி ஜமாலுடினிடம் தோல்வி கண்டார். அதன் பிறகு 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கைரி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் இளைஞர் பிரிவுத் தலைவராக இருப்பதால்தான் அமைச்சராக நியமிக்கப்பட்டதாக நஜீப் தெரிவித்திருந்தார்.
எனினும், 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முக்ரிஸ் கெடாவின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதோடு, அம்னோ உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

துன் அப்துல்லா படாவியின் மருமகன் தமது மகனை விட செல்வாக்கோடு இருப்பதை விரும்பாத டாக்டர் மகாதீர் அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசி அம்னோவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி வருகிறார். அவர் மனம் கலங்கிய நிலையில் இல்லையென்றாலும் அவர் வஞ்சினத்தைக் கொண்டு செயல்படுவதாக நஸ்ரி சாடினார்.