புத்ராஜெயா, ஜூலை.20 –
டி.ஏ.பி எனப்படும் ஜனநாயக செயல் கட்சி தனது கட்சியின் உச்சமன்ற பதவிகளுக்கான தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்பதில் சங்கப் பதிவகம் உறுதியாக உள்ளது. அந்த முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ முஹமட் ராசின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
டி.ஏ.பி உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் மறுதேர்தலை நடத்துமாறு சங்கப் பதிவகம் உத்தரவிட்டுள்ளதாக முஹமட் ராசின் கூறினார். டி.ஏ.பி உறுப்பினர்களின் புகார்களை விசாரித்தப் பின்னர் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்கட்சியின் உச்சமன்றத் தேர்தலில் முறைக்கேடுகள் நடந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக ராசின் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி.ஏ.பி கட்சியின் தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் அறிவித்ததை அடுத்து அந்த கட்சி 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் 23 ஆம் தேதி மறு தேர்தலை நடத்தியது.எனினும் அந்த தேர்தலும் முறையாக நடத்தப்படவில்லை என கடந்த ஜூலை 7 ஆம் தேதி வெளியிட்ட கடிதம் ஒன்றில் சங்கப் பதிவகம் தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு தேர்தல்களிலும் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை முரண்பாடாக இருப்பதாக ராசின் கூறினார். 2012 ஆம் ஆண்டில் டிசம்பர் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் வாக்களித்த அதே 2, 576 உறுப்பினர்களைக் கொண்டுதான் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என சங்கப் பதிவகம் தெரிவித்துள்ளது.
14 நாட்களுக்குள் சங்கப் பதிவகத்தின் உத்தரவை செயல்படுத்த டி.ஏ.பி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ராசின் தெரிவித்தார். மறுதேர்தல் நடத்தப்படாத பட்சத்தில் 1966 ஆம் ஆண்டில் சங்க அமைப்பு சட்டத்தின் கீழ் டி.ஏ.பி கட்சியின் பதிவு ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் டி.ஏ.பி நீதிமன்றத்தை நாடுவதற்கும் உரிமை உள்ளது என அவர் கூறினார்.
இதனிடையே புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கப் பதிவகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை டி.ஏ.பி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
சுதந்திரமான தணிக்கையாளர்கள் பரிசோதித்து 2013-இல் நடைபெற்ற தேர்தல் முறையாக நடந்தது என்றும், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக, சங்கப் பதிவகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி விளக்கம் அளிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஜசெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும், திங்கட்கிழமை முதல் தாங்கள் சங்கப் பதிவகத்துடன் தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் தரும்படி வேண்டுகோள் விடுத்தும் இன்றுவரை தங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என ஜசெகவின் மத்திய செயலவை உறுப்பினர் அந்தோணி லோக் இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதே வேளையில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு டி.ஏ.பி அஞ்சவில்லை என்றும் ஆனால், 2012-ஆண்டு பேராளர்கள் அல்லாமல், 2017-ஆம் ஆண்டுக்கான பேராளர்கள் கொண்ட பட்டியலைக் கொண்டு தேர்தலை நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் லிம் குவான் எங் தெரிவித்தார்.
லிம் குவான் எங்கின் நேற்றைய அறிவிப்புகளைத் தொடர்ந்து சங்கப் பதிவகத்துடன் சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தி டி.ஏ.பி மறு தேர்தலை நடத்துமா அல்லது சங்கப் பதிவகத்தின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் டி.ஏ.பி உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பது அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
