லண்டன், ஜூலை.20 –
ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி லண்டனில் நடைபெறவுள்ள உலக திடல் தடப் போட்டியில் தாம் இரண்டு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கவுள்ள உலகின் அதிவேக ஓட்டக்காரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறும் உலக திடல் தடப் போட்டியில் உசேன் போல்ட் 100 மீட்டர் மற்றும் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் தமக்கு மிகவும் பிடித்த 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என உசேன் போல்ட் கூறினார். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று உலகப் போட்டிகளில் உசேன் போல்ட், 100, 200 மற்றும் 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அந்த மூன்று போட்டிகளிலும் மூன்று தங்கங்களை வென்ற உசேன் போல்ட் இம்முறை இரண்டு தங்கப் பதக்கங்களுக்கு மட்டுமே குறி வைத்துள்ளார். லண்டனில் நடைபெறும் உலக திடல் தடப் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக உசேன் போல்ட் அறிவித்திருப்பதால் இம்முறை நடைபெறும் போட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
