Homeமலேசியாசுங்கை யூ நிலத்தை பெற்றவர்களின் அடையாள அட்டைகளில் முரண்பாடுகள்; கணபதிராவ் ஒப்புதல்

சுங்கை யூ நிலத்தை பெற்றவர்களின் அடையாள அட்டைகளில் முரண்பாடுகள்; கணபதிராவ் ஒப்புதல்

ஷா ஆலம், நவ. 9-
பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதியிலுள்ள சுங்கை யூ நிலத்தை பெற்றவர்களின் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதேவேளையில், போலியான தகவல்களை கொண்டு குறிப்பிட்ட தரப்பினர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவதை அது முற்றிலுமாக மறுத்தது. இது குறித்து சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறுகையில், நிலங்களை பெற்றவர்களின் அடையாள அட்டைகள் முரண்பட்டிருக்கும் விவகாரம் குறித்து அமலாக்கத் தரப்பினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சுங்கை யூ நிலங்களை பெற்றவர்கள் 5ஏ பாரத்தை ஒப்படைத்த போது அதில் அடையாள அட்டைகள் முரண்பட்டிருப்பதை கோலசிலாங்கூர் மாவட்ட நில இலாகா வாயிலாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. பல தலைமுறைகளாக அங்கு சில குடும்பங்கள் இருந்துவரும் நிலையில் இவ்விவகாரம் குறித்து நில இலாகா விசாரணையை மேற்கொண்டு வருவதாக மாநில சட்டமன்றத்தில் பேசிய அவர் கூறினார்.

நேற்று முன்தினம் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சுலைமான் ரசாக், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையிலான அரசாங்கம் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தியவர்களுக்கு சுங்கை யூ நிலங்களை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தினார். தாம் மேற்கொண்ட ஆய்வில் போலி அடையாள அட்டையை பயன்படுத்திய சுமார் 18 பேருக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் இந்த நில திட்டத்திற்கு தகுதிகளை கொண்டிருக்காத மருத்துவர், ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும் நிலங்கள் வழங்கப்பட்டிருப்பதாக சுலைமான் ரசாக் கூறினார்.

இது குறித்து கணபதிராவ் கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் அந்நிலத்தை மேம்படுத்தி வந்ததன் அடிப்படையிலேயே நிலங்கள் வழங்கப்பட்டதாக விளக்கமளித்தார். நான் நிலத்தை மருத்துவருக்கு வழங்கியதாக சுலைமான் ரசாக் கூறிக்கொண்டு வருகிறார். சுமார் 3 தலைமுறைகளாக அவர்கள் அந்நிலத்தை மேம்படுத்தி வருவதால் சுங்கை யூ நிலத்தின் அசல் உரிமையாளர்களுக்கு தகுதிக்கான விதிமுறைகளில் தளர்வு வழங்கப்பட்டதாக கூறினார். அதோடு, இந்த நில திட்டத்திற்கான தகுதியாக 2000 வெள்ளிக்கும் குறைவான வருமானத்தை சம்பந்தப்பட்டவர்கள் பெற வேண்டும். இருப்பினும், இவ்விவகாரத்தை மாநில சட்ட ஆலோசகரிடம் கொண்டு செல்வேன் என கணபதிராவ் கூறினார்.

இதனிடையே, மாநில அரசாங்கம் வேண்டியவர்களுக்கு நிலங்களை வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்கும் நிலையில் அது உள்ளதாகவும் கணபதிராவ் சொன்னார்.

spot_img

latest articles

explore more