கோலாலம்பூர், நவ, 9-
ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைக்கும் ‘அனைத்துலக பேசு தமிழா பேசு 2017 எனும் கல்லூரி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கான அனைத்துலகப் பேச்சு போட்டியில் பங்கேற்க மலேசியாவைப் பிரதிநித்து மூன்று பேச்சாளர்கள் இலங்கைக்குப் புறப்படுகின்றனர். 2-ஆவது முறையாக நடத்தப்படும் இந்த ‘அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டி, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் ஸ்டேன்லி விஜய சுந்தர மாதவாவிலுள்ள நாடா (NADA Hall) அரங்கத்தில் நவம்பர் 12-ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியன்மார் மற்றும் மலேசியா உள்பட 5 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில், மலேசியாவைப் பிரதிநிதித்து புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குமரவேல் வேலன், வட மலேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நித்தியா சைகன் மற்றும் கிளந்தான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமாபரன் மணிவேல் ஆகிய மூவரும் களமிறங்குகின்றார்கள். அதே போன்று, இப்போட்டியில் பங்கேற்கும் மற்ற 4 நாடுகளிலிருந்து தலா மூன்று போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மலேசியாவில் இவ்வாண்டும் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட ‘பேசு தமிழா பேசு போட்டியில் பங்கேற்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களிலிருந்து முதல் சுற்றுக்கு 36 பேர் மட்டுமே தேர்வாகினர். அதனைத் தொடர்ந்து இப்போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு 16 பேர் தேர்வாகி இறுதிச் சுற்றுக்கு 4 பேர் தகுதிப் பெற்று போட்டியிட்டார்கள். தேசிய ரீதியிலான மாபெரும் இறுதிச் சுற்றில் முதல் மூன்று இடத்தை வாகைச் சூடிய குமரவேல், நித்தியா, உமாபரன் ஆகியோர் இலங்கையில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து களமிறங்குகின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் முதலாவது ‘அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து சிவராஜ் லிங்கராஜ், கலைச்செல்வி ரத்னம் மற்றும் வசந்தன் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிரடியான பேச்சாற்றால் பலம் பொருந்திய பிறநாடுகளின் பேச்சாளர்களை வென்று, வெற்றியாளர் பட்டத்தை வாகைச் சூடி சிவராஜ் மலேசியாவுக்குப் பெருமைச் சேர்த்தார்.
இன்றைய மாணவர்களே, நாளைய தலைவர்கள் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப பேச்சாற்றலும் சமுதாய கருத்தோட்டமும், பொது அரங்கில் தங்களின் சிந்தனைகளை முன்வைக்கும் துணிச்சலும் கொண்ட தலைமைத்துவ பண்புகளை இன்றைய மாணவர்களிடையே உருவாக்குவதற்கான ஒரு பயிற்சி களமாக இந்த ‘அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டி வடிவம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 12-ஆம் தேதி இலங்கையில் 2ஆ-வது முறையாக நடைபெறவுள்ள ‘அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டியில் மலேசியாவுக்கு மீண்டும் வெற்றிப் புகழைச் சேர்க்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் இருப்பதாக மலேசியாவைப் பிரதிநித்து செல்லும் குமரவேல், நித்தியா மற்றும் உமாபாரன் ஆகியோர் கூறினார்.
தேசிய ரீதியிலான ‘பேசு தமிழா பேசு போட்டியில் முதல் இடத்தைத் தட்டிச் சென்ற குமரவேல், மலேசியாவைப் பிரதிநித்து செல்வது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்கிறார். அதை வேளையில், நேரம் பற்றாக்குறையாக இருந்தாலும் போட்டிக்கான பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார் நித்தியா. பயிற்சி மற்றும் உழைப்பும் தண்டி பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் இப்போட்டியில் வெற்றி பெற பெரிதும் துணைப்புரியும் என்கிறார் ‘பேசு தமிழா பேசு போட்டியின் மூன்றாம் நிலை வெற்றியாளர் உமாபாரன்.

