Homeமலேசியாபக்காத்தான் ஹரப்பான் பதிவின் தாமதத்திற்கு பிபிபிஎம், ஜ.செ.க. கட்சிகள்தான் காரணமா?

பக்காத்தான் ஹரப்பான் பதிவின் தாமதத்திற்கு பிபிபிஎம், ஜ.செ.க. கட்சிகள்தான் காரணமா?

புத்ராஜெயா, நவ. 20-
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் (நம்பிக்கை கூட்டணி) பதிவிற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் பெறுவதற்காக பிபிபிஎம் கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் இன்று உள்துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அல்வி இப்ராஹிமை சந்திக்க சென்றார்.

அங்கு உள்துறை அமைச்சின் அதிகாரிகளிடம் சுமார் 20 நிமிடங்கள் விளக்கம் பெற்ற துன் டாக்டர் மகாதீர் செய்தியாளர்களை சந்தித்த போது, பிபிபிஎம், ஜ.செ.க. ஆகிய கட்சிகளில் எழுந்துள்ள பிரச்னைகளின் காரணமாக நம்பிக்கை கூட்டணியின் பதிவு நடவடிக்கை தாமதமாவதாக தெரிவித்தார். இந்த பிரச்னைகள் எங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் தீர்வு கண்டிருப்போம்.அரசாங்கத்தை எதிர்க்கவோ அல்லது பிரச்னைகளை ஏற்படுத்தவோ நாங்கள் எண்ணம் கொண்டிருக்கவில்லை. சட்டத்தை மீறாமல் இருக்கும் வகையில் என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமோ அதை நாங்கள் நிச்சயமாக கடைப்பிடிப்போம்.

எங்கள் கூட்டணியை மிக விரைவாக பதிவு செய்ய விரும்புகிறோம். ஒருவேளை எங்கள் கூட்டணியின் பதிவிற்கான அனுமதி தாமதமாக கிடைத்தால் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். உள்துறை அமைச்சின் அதிகாரிகள் நம்பிக்கை கூட்டணியின் பதிவு ஏன் தாமதமாகின்றது என்பது குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நம்பிக்கை கூட்டணி வழங்கிய அக்கூட்டணியை பதிவதற்கான மனு இன்னமும் பரிசீலணையில் இருப்பதாக தேசிய சங்கப் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) கடந்த 2ஆம் தேதி தெரிவித்தது. அண்மையில், ஆர்.ஓ.எஸ். பிபிபிஎம் கட்சி 3 தவறுகளை செய்துள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. அதில், ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்தாதது, அர்மாடா எனும் இளைஞர் பிரிவை தோற்றுவித்தது, கட்சியின் சட்டவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு முரணாக ஆண்டு கூட்டத்தை ஒத்தி வைத்தது என மூன்று குற்றச்சாட்டுகளை ஆர்.ஓ.எஸ். முன்வைத்தது. இதில், கட்சியின் சட்டவிதிக்கு மாறாக ஆண்டு கூட்டத்தை ஒத்தி வைத்ததால் அக்கட்சியின் பதிவு இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜ.செ.க. அதிகாரப்பூர்வமான மத்திய செயலவையை கொண்டிருக்கவில்லை என்றும் மறுத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஆர்.ஓ.எஸ். உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் அக்கட்சி தனது மத்திய செயலவைக்கான மறுத்தேர்தலை நடத்தியது. இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்ற ஜ.செ.க.வின் சிறப்பு கூட்டத்தின் அறிக்கையை இவ்வாரத்தில் ஆர்.ஓ.எஸ்.விடம் தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் டான் கோக் வாய் தெரிவித்தார். நம்பிக்கை கூட்டணியின் பதிவை விரைவுப்படுத்துவதற்காக இந்த அறிக்கை விரைவாக அனுப்பப்படவிருப்பதாக அவர் சொன்னார்.

spot_img

latest articles

explore more