கோலாலம்பூர், நவ.20 –
நாட்டில் புதிதாக கட்டப்படும் ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் கிள்ளானில் கட்டப்படும் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு பூர்த்தி அடைந்து விட்டதாக டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.
அந்த ஆறு தமிழ்ப்பள்ளிகள் எதுவென்றால், தாமான் கெலாடி( சுங்கைப்பட்டாணி, கெடா); ஈவூட் எஸ்டேட், (சுங்கை சிப்புட் பேரா); தாமான் செந்தோசா, (கிள்ளான், சிலாங்கூர்); தாமான் பிஜே எஸ்1, (பெட்டாலிங் ஜெயா, சிலங்கூர்); பண்டார் மாஹோத்தா, (செராஸ், கோலாலம்பூர் ) மற்றும் பண்டார்ஸ்ரீ அலாம், (மாசாய், ஜோகூர்) ஆகும்.

கோலாலம்பூரில் ஜோகூர் கோத்தா திங்கியில் கட்டப்படும் ஜாலான் தாஜோல் தமிழ்ப்பள்ளிக்கான நியமன கடிதத்தை வழங்கிய நிகழ்ச்சியில் டாக்டர் சுப்ரமணியம் இவ்வாறு தெரிவித்தார். இடமாற்றம் அடிப்படையில் நடப்பில் உள்ள அந்த பள்ளி புதிய இடத்தில் கட்டப்படுகிறது.
இதற்காக அரசாங்கம் ஒரு கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. புதிய இடத்தில் 12 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படும் என டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். இந்தப் பள்ளியில் தற்போது 205 மாணவர்கள் பயில்கின்றனர்.




