Home மலேசியா கல்வி வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான 4 ஏக்கர் நிலம் எங்கும் போய்விடவில்லை!

வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான 4 ஏக்கர் நிலம் எங்கும் போய்விடவில்லை!

320

புத்ராஜெயா, நவ.20-
கெடா, லூனாசிலுள்ள வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான நிலம் எங்கும் போய்விடவில்லை என துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார். தற்போது 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலம் போதாது என்று கூடுதல் நிலம் கோரி, இவ்வாண்டு முற்பகுதியில் பள்ளி நிர்வாகம் மனு செய்திருந்ததாக இன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் அவர் கூறினார்.

அம்மனுவை பரிசீலனை செய்த சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனமும் கெடா மாநில அரசும் அப்பள்ளிக்கு அருகிலேயே மேலும் 2 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்தன.   புளூ சிப் சென்.பெர். (Blue Ship Sdn.Bhd.) எனும் புதிய மேம்பாட்டு நிறுவனம் அந்நிலத்தில் அடிக்கல் நாட்ட செய்திருந்த மனுவை மாநில அரசு அங்கீகரித்துள்ளது.

அடிக்கல் நாட்டும் நடவடிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பள்ளி நிர்வாகம் அது தொடர்பான மனு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர, சிறிது காலம் ஆகலாம். இதன் தற்கால நிலவரம் குறித்து பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக டத்தோ கமலநாதன் சொன்னார்.

இதனிடையே, வெல்லெஸ்லி ரப்பர் எஸ்டேட் (Wellesely Rubber Estate) நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த நிலம், தற்போது கோல்டன் சிப் சென்.பெர். (Golden Blue Ship Sdn.Bhd) நிறுவனத்துக்கு கைமாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.