கோலாலம்பூர், நவ.21-
மலேசியாவில் வாகன விபத்துகள் தினசரி காட்சிகளாக மாறிவிட்டது. குறிப்பாக, பெருநாள் காலங்களில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இதனை குறைப்பதற்கு அரசாங்கமும் ஓப்ஸ் பாச்சாக், ஓப்ஸ் சீக்காப், ஓப்ஸ் ஸ்தாதிஸ்திக் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இதன் காரணமாக, போக்குவரத்துறை அமைச்சு வாகனங்களை வாங்கும் விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றது.
இதுகுறித்து போக்குவரத்துதுறை துணையமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி கூறுகையில், தனிநபர்களின் வாகன எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். புள்ளி விவரப்படி ஓர் ஆண்டுக்கு 15 லட்சம் புதிய வாகனங்கள் வெளியாகின்ற வேளையில் சுமார் 500,000 புதிய ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுகின்றனர். ஒரு வீட்டில் குறைந்தது 6 கார்கள் உள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் வாகனத்தை வாங்க வேண்டுமென்றால் சி.ஓ.ஈ. எனப்படும் உரிம சான்றிதழை கொண்டிருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் ஒரு சில வீடுகளில் 6 கார்கள் உள்ளது.
ஆகையால், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களான நெடுஞ்சாலை பாதுகாப்புத்துறை, சாலை போக்குவரத்துத்துறை (ஜே.பி.ஜே), மலேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆய்வு மையம் (மீரோஸ்) முதலானவை விரைவில் விவாதிக்கும்.
போலீஸும் அமலாக்கத்தரப்பினரும் சாலை விபத்துகளால் ஏற்படும் மரண சம்பவங்களை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டனர். ஆனால், வாகன ஓட்டுநர்களின் பொறுப்பின்மையாலும் அலட்சியத்தாலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்படுவதாக டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி குறிப்பிட்டார்.


