கோலாலம்பூர், டிச. 18-
கராத்தே விளையாட்டில் இந்திய இளைஞர்களின் சாதனைகள் தொடர வேண்டும் என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் வலியுறுத்தினார். விளையாட்டுத்துறையில் இந்தியர்களுக்கு முழுமையான வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் கிடைக்கின்ற வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
மலேசியாவில் காலங்காலமாய் கராத்தே விளையாட்டில் ஈடுபட்டு வரும் வீரர்கள் மலேசியாவை தவிர்த்து அனைத்துலக ரீதியிலும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இச்சாதனைகள் வரும் காலங்களில் தொடர வேண்டும்.
அதன் அடிப்படையில் கராத்தே பயிற்சிகளைப் பெறும் மாணவர்கள் அதில் முழுத் திறனை வெளிப்படுத்தி போட்டியாளர்களை வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதே போன்று தங்களின் பிள்ளைகள் இவ்விளையாட்டில் ஈடுபடுவதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று தாமோதரன் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே பேரின்பம் மலேசியா இயக்கத்தின் முயற்சியில் கோல சிலாங்கூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோல சிலாங்கூரில் உள்ள ராஜா மூசா, கம்போங் பாரு, சுங்கை தெராப், சுங்கை திங்கி, ரிவர் சைட், நைகல் கார்டனர் ஆகிய தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஜோகூரில் துன் அமினா, யாஹ்யா அவால், ஹாஜி மனான், தாஜோல், கோத்தா திங்கி ஆகிய தமிழ்ப்பள்ளிகளில் இப்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கும் 60 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மேலும் பல சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு பத்துகேவ்ஸ் சிவானந்தா ஆசிரமத்தில் இம்மாணவர்களும் கராத்தே பயிற்சிகளை மேற்கொண்டனர். கராத்தே பயிற்சியை தவிர்த்து இம்மாணவர்களுக்கு சமயம், தெய்வ வழிபாடு, பஜனைகள் என அனைத்தும் கற்றுத் தரப்படும்.
மாணவர்கள் கட்டொழுங்குடன் வளர வேண்டும் என்ற நோக்கில் தான் இப்பயிற்சி இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தாமோதரன் கூறினார். இதனிடையே இப்பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. பேரின்பம் மலேசியா இயக்கத்தின் துணைத் தலைவர் ஜெயராமன், தலைமை செயலாளர் குபேரன் உட்பட பல பிரமுகர்கள் மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினர்.


