பெட்டாலிங் ஜெயா மார்ச் 11-
மலேசியாவில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் புத்ரா இண்டலெக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு விழா பெட்டாலிங் ஜெயா ஹில்டன் தங்கும் விடுதியில் மிக விமரிசையாக நடந்தது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 350க்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இந்திய மாணவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்ரா இண்டலெக் கல்லூரியில் படித்து இதுவரையில் 8500 மாணவர்கள் இளங்கலை பட்டம் பெற்று இருப்பதாக இக் கல்லூரியின் தலைவர் டாக்டர் பரதன் குறிப்பிட்டார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமது கல்லூரி கல்வி திட்டங்களை முன்னெடுக்கின்றது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

மாணவர்கள் எதிர்கால சவால்களை இப்போது அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்தத் துறையில் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்க முடியும் என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியும். அப்படி முடிவு செய்ய முடியாத மாணவர்களுக்கு கூட தமது கல்லூரி விரிவுரையாளர்கள் ஆலோசனைகளை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
100 விழுக்காடு வேலை உறுதியை நாம் வழங்குகின்றோம். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது திறன் சார்ந்த பயிற்சிகளையும் வழங்குகின்றோம். இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கின்றது என்றார் அவர்.
இடர் கலை மேலாண்மை, தடயவியல், கணக்காய்வு சார்ந்த துறைகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. அந்த முழு பயிற்சிகளையும் பாடத்திட்டங்களையும் தமது கல்லூரி முன்னெடுக்கின்றது என பரதன் கூறினார்.
மருத்துவர், வழக்கறிஞர் இந்த இரண்டு துறைகளை தவிர்த்துவிட்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை இந்திய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாடு தொழில் புரட்சி 4.0 நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அந்த பயணத்தில் அனைத்தும் இயந்திரமயமாக இருக்கின்றது. ரோபோட் பயன்பாடு அதிகமாகும் பட்சத்தில் மனிதனின் மனிதவளம் எவ்வாறு பயன்படுத்தப்படும்? ஒரு மிகப்பெரிய தொழிலியல் உருமாற்றம் நடக்கும். நாம் விரும்பாவிட்டாலும் அந்த மாற்றம் நடந்தே தீரும். அதற்கு இப்போது நாம் தயாராகிவிட வேண்டும் என பரதன் குறிப்பிட்டார்.
நாம் மாற்றத்திற்கு தயாராக மாட்டோம் என்ற சிந்தனையை கொண்டிருந்தால் காலம் நம்மை ஒதுக்கி விட்டு சென்றுவிடும். உலகம் எதை நோக்கி பயணிக்கிறதோ.. அதை நோக்கிதான் நாமும் பயணிக்க வேண்டும். குறிப்பாக இக்கால இளைஞர்கள் தொழில் புரட்சி 4.0 குறித்து முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் என்பதையும் டாக்டர் பரதன் வலியுறுத்தினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மலேசியாவின் முதன்மை தன்முனைப்பு பேச்சாளரான பேராசிரியர் முனைவர் காதர் இப்ராஹிம் கலந்துகொண்டார்.





