Homeஅரசியல்டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்! – டி.முருகையா புகழாரம்

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்! – டி.முருகையா புகழாரம்

கோலாலம்பூர், ஜூன் 16-

ஜூன் 22 ஆம் தேதியோடு நாடாளுமன்ற மேலவை தலைவர் பொறுப்பில் இருந்து சிறப்பான முறையில் சேவையாற்றி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் சேவையை நாடும் மக்களும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கூறினார்.

“2014 ஆண்டு முதல் 6 ஆண்டுகளுக்கு செனட்டராகவும், 2016-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மேலவைத் தலைவராகவும் விக்னேஸ்வரன் பணியாற்றியிருக்கிறார். மூன்று வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ், மூன்று மாமன்னர்களின் ஆட்சியின் கீழ், மூன்று வெவ்வேறு பிரதமர்களின் தலைமைத்துவத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர் அவர்” என்றும் டி. முருகையா இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் புகழாரம் சூட்டினார்.

“மேலவைத் தலைவராக பல்வேறு கட்சிகளைச் சார்ந்த செனட்டர்களுக்கு நியாயமாகவும், சரி சமமாக வாய்ப்புகள் கொடுத்தும் பணியாற்றியவர் விக்னேஸ்வரன்” என்றும் முன்னாள் செனட்டரும், முன்னாள் துணையமைச்சருமான முருகையா தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

“அதேவேளையில் தனது பதவிக் காலத்தின்போது இந்திய சமூகமும் பலவகைகளில் தனது பதவியின் மூலம் பயன்பெறும் வண்ணம் பல்வேறு சேவைகளை வழங்கியவர் விக்னேஸ்வரன். மேலவைத் தலைவராக அவர் எடுத்த முடிவுகள் அத்தனையும் கட்சி சார்பின்றி, அரசியல் விருப்பு வெறுப்பின்றி எடுக்கப்பட்டவையாகும். செனட்டர்களுக்கு, மதிப்பு கொடுத்தவர் அவர்.

அவரது ஆலோசனைகளும், அவர் சில கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் மேலவையில் ஏற்றுக் கொண்டதற்கும், நிராகரித்ததற்கும் காரணம் நாட்டு மக்களின் நலன்களுக்கும், நாட்டின் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதே ஆகும்” என்றும் முருகையா தெரிவித்தார்.

“நாடாளுமன்ற மேலவை தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் மஇகா தேசியத் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓர் இக்கட்டான, நாடு கொந்தளிப்பான அரசியல் சூழலில் சிக்கியிருந்த காலகட்டத்தில் அவர் தேசியத் தலைவர் பொறுப்புக்கு வந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 60 ஆண்டு கால ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட சோதனையான காலகட்டத்தில் அவர் கட்சியின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரவலாக மஇகா மீதான நம்பிக்கை சிதைந்து கிடந்த, மக்களிடம் கட்சி மீதான நம்பிக்கை மிகவும் குறைந்திருந்த காலகட்டத்தில் அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது கடுமையான உழைப்பாலும் சேவையாலும் தலைமைத்துவ ஆற்றலாலும் மீண்டும் கட்சியை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளார். பல்வேறு பிரச்சனைகள், அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலில் மஇகா மீதான இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அவரது தலைமைத்துவம் விதைத்திருக்கிறது என்றால் மிகையாகாது” என முருகையா குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more