spot_img
6.4 C
London
spot_img
Home மலேசியா கல்வி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி! 40 பேராளர்கள் சென்னைக்கு பயணம்!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி! 40 பேராளர்கள் சென்னைக்கு பயணம்!

0
525

 தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல்  நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அதீத கவனம் செலுத்தி வருகின்ற கல்வி அமைச்சு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலேசிய கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் – ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

‘ஆசிரியர் பயிற்சி இலக்கு நிர்ணய பயணம்’ எனும் கருப்பொருளை தாங்கியிருக்கும் இச்சிறப்புப் பயிற்சியில் பங்கேற்க, மலேசிய கல்வி அமைச்சை சேர்ந்த 40 பேராளர்கள் இன்று (18.12.2017) திங்கள்கிழமை அதிகாலை காலை மணி 5.30க்கு சென்னைக்கு பயணமானார்கள். அக்குழுவுக்கு  கல்வி அமைச்சின் பாஸ்கரன் சுப்பிரமணியம் தலைமையேற்றுள்ளார். திங்கள் தொடங்கி வியாழன் வரை நான்கு நாட்களுக்கு சென்னையிலுள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறுகின்ற இப்பயிற்சி பட்டறையானது கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் பெருமுயற்சியில் உருவானது ஆகும்.

இப்பயணம் தொடர்பாக அவர் குறிப்பிட்டதாவது:- பேராளர்கள் எட்டு தலைப்பிலான பயிற்சிகளில் பங்கெடுப்பர். தமிழ் மொழித் திறன்களைக் கற்பித்தலும் மதிப்பிடுதலும், சோதித்தலும் மதிப்பிடலும், கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாடு, உடற்கல்வி, நலக் கல்வி மற்றும் யோகா, சமகால கல்வி, கலைத்திட்டத்தின் ஊடாக மொழி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாவட்ட மாநில மேலான்மை மற்றும் கல்வி தத்துவம் ஆகிய தலைப்புகளிலும் ஆசிரியர் பயிற்சி தலைப்பிலும் பேராளர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.

இப்பயணத்தின் போது, பேராளர்கள் அனைவரும் அரசு தமிழ்ப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர். தொடர்ந்து, தமிழ்நாட்டு கல்வி அதிகாரிகளும் மலேசியக் கல்வி அதிகாரிகளும்  இரு நாட்டு கல்வி வளர்ச்சி மற்றும் இருவழி கல்வி உறவு பற்றிய கலந்துரையாடலில் பங்கெடுப்பர்.

இவ்வாண்டு, இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணத்தில் கல்வி அமைச்சின் பள்ளி பிரிவு, பாடப்புத்தக பிரிவு, கலை மேம்பாட்டுத்திட்ட பிரிவு, புறப்பாட பிரிவு, பாடப்புத்தக பிரிவு, கலை மேம்பாட்டுத்திட்ட பிரிவு, புறப்பாட பிரிவு, தேர்வு வாரியம், மாநில தமிழ் மொழி உதவி இயக்குநர்கள், மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்சி கழகம் ஆகிய பிரிவுகளின் அதிகாரிகளும், தேசிய ஆசிரியர் பணியாளர் சங்க தமிழ்ப்பிரிவு பொறுப்பாளர்கள், ஆசிரியர் திலக முதன்மை வெற்றியாளர்கள், பூச்சோங் 14ஆவது மைல் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் என கல்வி அமைச்சை சார்ந்தவர்கள் இப்பயணத்தில் கலந்து பயன்பெறுவர்.

இப்பயணத்தின் தொடர் நடவடிக்கையாக, 2018ஆம் ஆண்டில் மலேசிய தமிழாசிரியர்களுக்காக தொடர் பயிற்சிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.