பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா! டத்தோ பழனியப்பன்

கோலாலம்பூர், ஜன. 3-

பி40 பிரிவின் கீழ் உள்ள இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை இயக்கம் தொடங்கியுள்ளது என அதன் தலைவர் பழனியப்பன் கூறினார். கடந்த காலங்களில் அரசாங்கம் ஓராண்டுக்கு வழங்கிய நிதி உதவியைக் கொண்டு ஈராண்டுகள் இந்த கல்வி நிலையத்தை சிறப்பாக வழி நடத்தி உள்ளோம் என்றார் அவர்.

இவ்வாண்டு இந்த நடவடிக்கையை தொடங்குவதற்கு இன்னமும் மானியம் கிடைக்கவில்லை என்றாலும் வறுமையின் கோட்டின் கீழ் இருக்கும் இந்திய மாணவர்களின் தேவையை அறிந்து கொண்டு 33 நிலையங்களில் இந்த வகுப்பு நடைபெறும் என பழனியப்பன் உறுதியளித்தார்.

நாடு தழுவிய நிலையில் 33 கல்வி நிலையங்களை அமைக்க தாம் இலக்கு கொண்டுள்ளதாகவும் இதுவரையில் 21 நிலையங்கள் செயல்படுவதற்கு தயாராகிவிட்டதாகவும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறினார்.

இந்த 21 கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பாடத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலர் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றார்கள் என பழனியப்பன் கூறினார். அரசாங்கம் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் ஏதேனும் மானியங்களை அறிவித்தால் 48 நிலையங்களில் இந்த கல்வி நிலையம் செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பழனியப்பன் சுட்டிக்காட்டினார்.

கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற சிறந்த நடவடிக்கையை நமது கல்வி நிலையம் முன்னெடுத்தது. அதன் வெற்றியை கடந்த தேர்வு முடிவுகளில் காண முடிந்ததாக அவர் கூறினார். எஸ் பி எம் தேர்வில் 8,9 ஏ பெற்ற மாணவர்களை எமது கல்வி நிலையம் கொண்டுள்ளது என்றார் அவர்.

நமது கல்வி நிலையத்தில் 3000 மாணவர்கள் இதுவரையில் கல்வி கற்றுள்ளனர். கடந்த முறை ஒரு பாடத்திற்கு ஒரு மணி நேரமே ஒதுக்கப்பட்டது. இந்த முறை ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம் முப்பது நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கல்வித் திட்டத்தில் புதிய யுக்திகளை நம்புகின்றோம். மாணவர்கள் வகுப்பில் படிக்கும் பாடங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது. அதோடு அவர்கள் ஒவ்வொரு நாளும் என்ன படித்தார்கள் என்பதை வகுப்பிற்கு இறுதியில் ஒரு பயிற்சியாக எழுத வேண்டும் என்றும் பழனியப்பன் கூறினார்.

குறிப்பாக இந்தக் கல்வி முறையில் தொடக்கமாக ஆசிரியர் பாடத்திட்டம் குறித்து விளக்கமளிக்க வேண்டும். பின்னர் அதற்கான உதாரணங்களை வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து அது சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இறுதியாக இந்த பயிற்சியில் என்ன பிரச்சனை எழுந்தது? அதை எப்படி தீர்க்கலாம் என்பது குறித்த தெளிவான விளக்கமும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக பழனியப்பன் தெரிவித்தார்.

ஜப்பானியர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். குறிப்பாக ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் நமது கல்வி நிலையத்தில் அனைத்தும் ஜப்பானிய பாடத்திட்டத்தின் நுணுக்கங்களை கருத்தில் கொண்டு அதன் வழி மாணவர்களை தயார்படுத்த போவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

சத்ரியா கைசன் எனப்படும் தொடர் மேம்பாடு இந்த கல்வி நிலையத்தின் வழி மாணவர்களுக்கு கிடைக்கும். இனி மாதத்திற்கு அல்லது ஆண்டிற்கு இரண்டு முறை இல்லாமல் ஒவ்வொரு வாரமும் வீட்டில் செய்யும் பாடத்திட்டத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அதை அறிந்துகொள்ள பெற்றோர்களின் கையெழுத்து ஒவ்வொருவாரமும் பதிவு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். அப்படி பிள்ளைகள் மீது அக்கறை கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இங்கு சேர்க்க வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் அவர்.

அடுத்ததாக ஆண்டிற்கு 6 முறை அவர்களுக்கு தேர்வு வழங்கப்படும். அந்த தேர்வின் மூலம் அவர்களுடைய மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது மூலம் எப்படிப்பட்ட மாணவர்களுக்கு எம்மாதிரியான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதும் இதன் மூலம் முடிவு செய்யப்படும். இந்த கல்வி நிலையத்தை பொறுத்தவரை மாணவர்களுக்கு கடவுள் நம்பிக்கை, சமுதாய அக்கறை, பொறுப்புணர்வு, ஒழுக்கம் என்பது இங்கு முதன்மையாக போதிக்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் மிகப் பெரிய கருத்தரங்கை நடத்தி மாணவர்களுக்கான அடிப்படை அறிவாற்றலை மேம்படுத்தும் செயல்திட்டங்களும் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இந்தக் கல்வி நிலையத்தில் உண்டு. அதோடு மாணவர்களின் நலனில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காக பெற்றோர்களுடன் இணைந்து செயல்படும் செயல் திட்டங்களையும் நாம் கொண்டுள்ளோம் என பழனியப்பன் கூறினார்.

நமது கல்வி நிலையத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் நமது கல்வி நிலையத்தின் செயல் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அதனால் இளம் சத்ரியா எனும் திட்டத்தையும் நம் தொடங்கி இருக்கின்றோம். இதன் மூலம் இளைய தலைமுறைக்கு இளைஞர்களே வழிகாட்டும் ஆற்றலை நாம் உருவாக்கியுள்ளோம்.

உயர் நிலை சிந்தனை, தொழில் புரட்சி 4.0 ஆகியவைதான் வருங்கால கல்விக்கான அடிப்படை விஷயங்களாக இருக்கின்றது. அதை கருத்தில் கொண்டு இந்த இரண்டு விஷயங்களையும் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கும் நடவடிக்கையையும் நமது கல்வி நிலையம் முன்னெடுக்கின்றது.

நமது கல்வி நிலையத்திற்கான பதிவு ஜனவரி 5ஆம் தேதி கெடா, ஜோகூர் மாநிலங்களில் நடக்கின்றது. பின்னர் 6ஆம் தேதி மாநிலங்களிலும் நடைபெறுகின்றது. இது குறித்த மேல் விவரங்களை முகநூல் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த காலங்களில் இந்த கல்வி நிலையத்தின் நடவடிக்கைகள் இலவசமாக முன்னெடுக்கப்பட்டது. இம்முறையும் இலவசமாக நடத்தப்படும் இந்த கல்வி நிலையம் மேல் குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவி என்பது வெகுவாக தேவைப்படுகின்றது.

30 லட்சம் வெள்ளி இருந்தால் இந்த பிரத்தியேக வகுப்பை மிகச் சிறப்பான முறையில் நடத்த முடியும். அப்படி அதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் நாட்டிலுள்ள நல்லுள்ளங்களின் அடிப்படையிலும் தமக்கு தெரிந்த வர்த்தகர்களின் உதவியோடு 33 கல்வி நிலையத்தை தம்மால் சிறப்பாக நடத்த முடியும் என பழனியப்பன் உறுதியளித்தார்.