செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சினி சத்ரியா புரொடக்ஷன் தயாரிப்பில் குற்றம் செய்யேல், – தமணி திரைப்படங்கள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சினி சத்ரியா புரொடக்ஷன் தயாரிப்பில் குற்றம் செய்யேல், – தமணி திரைப்படங்கள்

கோலாலம்பூர், ஜன. 3-

இந்நாட்டில் திரைப்படத்துறை என்பது ஒரு அபாரமான மாற்றத்தை அல்லது ஏற்றத்தைக் கண்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உள்நாட்டுத் திரைப்படம், தென்னிந்திய திரைப்படம் என்று பிரித்து பார்த்து ஒப்பீடு செய்த காலமெல்லாம் கடந்த போயின. இன்று மலேசிய திரைப்படங்கள் தனித்து நிற்கும் நிலையை எட்டி இருக்கின்றன.

இதனை பரிமாண மாற்றமென்று விமர்சிப்பதைவிட ஒரு இலக்கை நோக்கிய நெடும் பயணத்தில் அந்தந்தக் காலத்தில் சந்திக்க வேண்டிய அத்தியாவசிய மாற்றம் என்று சொல்லுவது சிறந்ததாக இருக்கும்.

மலேசிய திரைப்படத் தயாரிப்பில் புது முகங்களின் வரவுகள் என்பது அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற குற்றம் செய்யேல் தமணி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஒரு மருத்துவராக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் டாக்டர் செல்வா தம்முடைய இலக்கை அல்லது தம்முடைய ஆர்வத்தை திரைப்படம் தயாரிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நடிப்புத்துறையிலும் முழு ஈடுபாட்டைக் காட்டி தம்மை ஒரு நடிகராகவும் உருமாற்றி இருக்கிறார்.

யார் இந்த டாக்டர் செல்வா என்ற கேள்வியை முன் வைக்கும்போது அண்மையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் திரையிடப்பட்ட நான் கபாலி அல்ல தொடரின் தயாரிப்பாளர் இவர் தான்.

இதற்கு முன்னதாகவே இவர் தற்காப்பு எனும் தென்னிந்திய திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது குற்றம் செய்யேல் எனும் திரைப்படத்தை தயாரித்து கூடிய விரைவில் அதை திரையிடவும் தயாராய் இருக்கிறார்.

குற்றம் செய்யேல் படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், இதில் தென்னிந்திய நடிகரான போஸ், விஜய் டிவி தீனா ஆகிய இருவரும் டாக்டர் செல்வாவோடு இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படி மலேசிய திரைப்படங்களை தயாரிப்பதில் மிகப் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் டாக்டர் செல்வா தம்முடைய அடுத்த படத்திற்கான பட பூஜையையும் நடத்தி முடித்துள்ளார்.
நான் கபாலி அல்ல தொடரின் இயக்குனர் பாரதிராஜா, டாக்டர் செல்வா ஆகிய இருவரும் ஒன்றிணைந்து சினி சத்ரியா புரொடக்ஷன் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி இருக்கின்றனர். இந்நிறுவனத்தின் அடுத்த படம்தான் தமணி என்ற படமாகும்.

பெயரே சற்று வித்தியாசமாக இருக்கின்றதென்று நினைக்கிறீர்களா? பெயரைப் போன்று இத்திரைப்படத்தின் கதையும் மிக மிக வித்தியாசமாக இருக்குமென்று இந்த தமணி திரைப்படத்தின் கூட்டணி தெரிவித்துள்ளது. தமணி திரைப்படத்தை சுமார் 5 லட்சம் வெள்ளி செலவில் தயாரித்திருக்கும் இவர்கள், இப்படத்தின் இயக்குனர் என மதன் எனும் புது முகத்திற்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

இந்த இயக்குனர் மதன் யார் என்று கேட்கிறீர்களா? இவர் இதற்கு முன்னதாக என்ன படம் எடுத்திருக்கிறார் என்ற கேள்வி உங்களிடம் இருந்தால், உடனடியாக கொஞ்சமும் தாமதிக்காமல் உங்கள் கை பேசியிலோ அல்லது கணினியிலோ யூ டியூப் அகப்பக்கத்திற்குச் சென்று மலேசிய குறும்படங்களான வாய்ப்பு பார்வை 12 மணி நேரத்தில் ஒரு காதல் என்ற குறும்படங்களை பாருங்கள். இந்த குறும்படங்களின் இயக்குனர்தான் எஸ்.மதன்.

இவர் என்ன செய்துவிடுவார் என்ற கேள்வி இருந்தால், இந்த குறும்படங்களை பார்த்தபிறகு மதன் நிச்சயம் தமணி படத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கடந்த படமாக வழங்குவார் என்ற நம்பிக்கை ஏற்படும். அதே நம்பிக்கையில் தான் டாக்டர் செல்வாவும் மதனுக்கு இந்த புதிய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

இந்தப் படம் வெற்றிப் படமானால், அதனைத் தொடர்ந்து 2 படங்களை இயக்குவதற்கான வாய்ப்பை மதனுக்கே வழங்க தயாராக இருப்பதாகவும் டாக்டர் செல்வா – பாரதிராஜா கூட்டணி பூச்சோங்கில் நடைபெற்ற அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்புச் செய்தார்கள்.

தொடர்ந்து 10 திரைப்படங்களையாவது தயாரிக்க வேண்டும் அதுதான் சினி சத்ரியா புரொடக்ஷன் வாயிலாக தாம் மேற்கொள்ளவிருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான தொடர் நடவடிக்கையாகும். சினி சத்ரியா என்பதன் பொருள் சினிமா சதியன் என்பதாகும்.

எனவே, மலேசிய திரைப்படத்தை அடுத்த மைல் கல்லை நோக்கி நகர்த்திச் செல்லும் நடவடிக்கையில் இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செயல்படும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான கருணாஸ் சிறப்பு வருகை புரிந்தார். டாக்டர் செல்வாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. மலேசிய கலைத்துறை கடந்த 25 ஆண்டுகளில் மிக அபாரமான வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன