ஷாஆலம் டிசம்பர் 5-

இந்திய சமுதாய மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மிட்லெண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 200 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

அதனை நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார். அவரது தலைமையில் 50 அறைகள் உட்பட 200 மாணவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளோடு புறப்பாட நடவடிக்கைக்கான இடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கும் விடுதி 200 மாணவர்களை கொண்டு சிறப்பான முறையில் செயல்படும் காலகட்டத்தில் இதர தமிழ்ப்பள்ளிகளிலும் தங்கும் விடுதிகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்ற தமது கனவையும் செய்தியாளர்களிடம் சேவியர் ஜெயக்குமார் பகிர்ந்துகொண்டார்.

அதிநவீன வசதிகளோடு மாநாட்டு மண்டபத்துடன் கட்டப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்ற பெருமையை மிட்லெண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி கொண்டிருக்கின்றது. தற்போது 200 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக தங்கும் விடுதியை அமைத்த முதல் தமிழ்ப்பள்ளி என்ற பெருமையையும் அது பெற்றது.

பி40 பிரிவின்கீழ் இருக்கும் இந்தியக் குடும்பங்களை சார்ந்த 4,5,6 படிவ ஆண் மாணவர்களுக்கு முதல் கட்டமாக இங்கு படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அப்பள்ளியின் வாரிய தலைவர் உதயசூரியன் காளிமுத்து தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. 20 20 ஜனவரி தொடக்கம் இந்த தங்கும் விடுதி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.