செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இந்து சங்கத்தைவிட மஇகாவுக்கு இந்துக்கள் மீது அக்கறை அதிகம் –டத்தோ சிவராஜ்
சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்து சங்கத்தைவிட மஇகாவுக்கு இந்துக்கள் மீது அக்கறை அதிகம் –டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர், டிசம்பர் 8-

எந்த ஒரு விவகாரத்தையும் முழுமையாக அறிந்துக் கொள்ளாமல் அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷானுக்கு மஇகா உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RUU 355 எனப்படும் 1965ஆம் ஆண்டின் ஷரியா நீதிமன்றங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவில் விவகாரத்தில் மஇகாவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக மஇகா தலைவரும் செனட்டருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

ஆனால், அவர் அரசியல் காரணங்களுக்காக இந்து சமயத்தை அடமானம் வைக்க முற்படுவதாகவும் அவரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் மோகன் ஷான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஒரு இந்து சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன் RUU 355 பற்றிய முழு விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும். இந்து சங்கத்தைவிட மஇகா பெரிய கட்சியாகும். இந்தியர்களின் நலனில் மஇகாவிற்கு அதிக அக்கறை உள்ளது. பல ஆண்டுகளாக இந்தியர்கள் சம்பந்தப்பட்ட மதமாற்றம் பிரச்னை, ஆலய உடைப்பு போன்ற விவகாரங்களில் முன்னிலையில் நின்று பிரச்னையை கண்டறிவது மஇகாதான். இவ்வாறு இருக்கையில் நாங்கள் இந்திய சமுதாயத்தை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சிவராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்தியர்களின் மீது அக்கறை இருப்பதாக பேசும் இந்து சங்கம், அரசு இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாதது, இந்தியர்கள் வந்தேறிகள் என்று கூறியது பல விவகாரங்களில் ஏன் இந்து சங்கம் குரல் எழுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய சமுதாயத்தில் பல மதமாற்ற பிரச்னைகள் எழுந்திருக்கின்றது. இதுவரை இந்தப் பிரச்னைகளுக்கு இந்து சங்கம் என்ன செய்திருக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

எனவே, எந்த ஒரு உண்மையையும் தெரியாமல் அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிவராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன