துன் சாமிவேலுவிற்கு மனநலம் பாதிப்பா? கண்டறிய வேள்பாரி வழக்கு

0
22

கோலாலம்பூர், டிச.9-

ம.இ.கா.வின் முன்னாள் தலைவரும் பல ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து வந்துள்ள துன் எஸ்.சாமிவேலு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? அவரால் அவரது சொத்துகளை நிர்வகிக்க முடியுமா? என்பதை கண்டறியும்படி அவரது மகனான டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

டிசம்பர் 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அவ்வழக்கில், 57 வயதான வேள்பாரி 82 வயதுடைய துன் சாமிவேலுவை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தையின் மனநலம் குறித்து, 2001ஆம் ஆண்டு மனநல சட்டத்தின் செக்க்ஷன் 52-இன் கீழ் நீதிமன்றம் சாமிவேலுவின் மீது விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனநல பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படும் சாமிவேலு, தனது வழக்கறிஞருக்கு உத்தரவிட முடியுமா? என்பதைக் கண்டறியவும் அவரது சொத்துகளை மீட்க வேண்டும் என்ற நோக்கிலும் அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

நீதிமன்றம் தனது தந்தையின் மீது மனநல விசாரணையை மேற்கொள்வதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான், தம்மால் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியுமென வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தைக்கு எதிராக தாம் தொடுத்திருக்கும் அவ்வழக்கு குறித்து தாயார் தோ புவான் இந்திராணி சாமிவேலுவிற்கும் தமது சகோதரிக்கும் தெரியுமெனவும் வேள்பாரி வழக்கு மனுவில் கூறியுள்ளதாக டெ ஹெட்ஜ் மார்க்கெட்ஸ் எனும் இணையத்தள செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையேம், நாட்டின் முன்னணி தலைவராகவும் அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் நீண்ட காலம் இந்திய சமுதாயத்திற்கு தலைமையேற்றிருந்த சாமிவேலுவிற்கு இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.