ஶ்ரீ அபிராமியின் கனவுக்குத் துணை நிற்போம் !

கோலாலம்பூர் | பிப்பரவரி 10:-

பனிச்சறுக்கு நடனத் தாரகை ஶ்ரீ அபிராமி அறவாரியத்துக்கு மக்கள் நிதியாக ரி.ம. 544,265.98 திரண்டது. கடந்த 9-2-2021 நள்ளிரவு 12.00 மனி கணக்கின்படி, அந்த அறவாரியத்துக்கு 7121 பேர் நிதி வழங்கி இருப்பதாக ஶ்ரீ அபிராமியின் தந்தை சந்திரம் தெரிவித்துள்ளார்.

பனிச்சறுக்குப் போட்டியில் ஶ்ரீ அபிராமி தனது 5ஆவது வயதில் இருந்து ஈடுபட்டு வருகிறார். தேசிய நிலையைக் கடந்து அனைத்துலக நிலையிலும் தனது அபார திறமையின் வழி அவரது புகழ் ஓங்கி ஒலிக்கிறது.

மலேசியாவின் தங்கத் தாரகையான இவர் தற்பொழுது லாத்வியாவில் பனிச்சறுக்குப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான லாத்வியாவின் ரீகா நகரில் உலகத்தரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

உலகளாவிய நிலையில் தங்கங்களைக் குவித்த ஶ்ரீ அபிராமி, தன்னை அடுத்தக் கட்டத்திற்குத் தயார்படுத்திக்கொள்ளும் நோக்கில் லாத்வியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

2020 முதல் 2022 வரையிலான இந்தப் பயிற்சியில் நுப்டமானத் திறன்களைக் கற்று அனைத்துலகப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்குவார். ஒலிம்பிக் கனவினை நிறைவேற்றும் இப்பயணத்தில் இந்த இரண்டாம் கட்டப் பயிற்சி மிக முக்கியம்.

மூன்றாம் கட்டமாய் தான் பெற்ற திறன்பயிற்சிகளைக் கொண்டு 2023 முதல் 2026 வரையில் அனைத்துலகப் பனிச்சறுக்கு அமைப்பின் போட்டிகளில் களமிறங்கி அனுபவங்களைப் பெறூவார். தொடர்ந்து 2027 முதல் 2028 வரை இளையோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி 2028இல் இப்போட்டயில் பங்கெடுப்பார். அதனைத் தொடர்ந்து ஐந்தாம் கட்டமாய் 2029 முதல் 2030 வரையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி 2030இல் வரையில் குளிர்கால ஒலிம்பிக்கில் களமிறங்குவார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலம் ஒத்திவைக்கப்படலாம். அவ்வாறு 2026 மிலான் குளிர்கால ஒலிம்பிக் 2027க்கு ஒத்திவைக்கப்பட்டால் 20027லேயே ஶ்ரீ அபிராமி குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறா வாய்ப்புண்டு.

2020 முதல் 2030 வரையிலான இந்த கனவுப் பயணத்தைத் தொடங்க ஒம்ஸ் அறாவாரியமும் தமிழ் மலர் நாளிதழும் 2019-இல் ஶ்ரீ அபிராமியுடன் இணைந்தது. ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரிங்கிட் என 8 ஆண்டுகள் தொடர்ந்து நிதி வழங்க ஓம்ஸ் பா தியாகராஜன் முன்வந்தார். 2019இல் போட்டிகளில் பங்கெடுக்க ரி.ம. 45,000மும், 2020இல் லாத்வியாவில் பயிற்சியினை மேற்கொள்ள ரி.ம. 120,000 என மொத்தமாக ரி.ம. 165,000 வழங்கினார். மேலும், 2021இல் பயிற்சியைத் தொடர ரி.ம. 100,000 கொடுத்து உதவ முன்வந்தார்.

பத்து ஆண்டுகள் நீளும் இந்த 5 கட்டப் பயிற்சித் திட்டத்திற்கு மிகையானத் தொகை தேவைப்படும். இச்செயல்திட்ட நிறைவேற்றத்தின் அவசியத்தை உணர்ந்த ஓம்ஸ் தியாகராஜன் ஶ்ரீ அபிராமி அறவாரியத்தை உருவாக்கினார். இதன் நிதித் திரட்டும் நடவடிக்கைகளில் தற்போது ரி.ம. 544,265.98 சேர்ந்துள்ளது.

இத்தொகை 2022 வரை லாத்வியாவில் ஶ்ரீ அபிராமி மேற்கொள்ளும் பயிற்சி திட்டத்திற்கு கட்டம் கட்டமாக வழங்கப்படும். பொது மக்களில் பலர் ஶ்ரீ அபிராமியைத் தங்கள் வீட்டுக் குழந்தையாகக் கருதி தங்களால் இயன்ற தொகையினை வழங்கியுள்ளனர்.

அரசாங்கத்திடம் இருந்து குறிப்பாக விளையாட்டுத் துறை அமைச்சிடம் இருந்து இதுவரையில் இவ்விவகாரம் தொட்டு எந்தத் தகவலும் தாம் பெற வில்லை என ஶ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் தெரிவித்தார்.

நிதிச் சுமை நேர்ந்த போது அமைச்சிடம் விண்ணப்பித்திருந்ததைச் சுட்டிக் காட்டிய சந்திரன், தொடக்கத்தில் இரஷ்யா ஶ்ரீ அபிராமிக்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாகத தெரிவித்து ஓர் ஒப்பந்தத்தைக் கொடுத்திருந்தது. முழு செலவையும் இரஷ்யா ஏற்றுக் கொள்ளும் நிலையில் இரஷ்ய நாட்டின் போட்டியாளராகத்தான் களமிறங்க வேண்டும் எனும் நிபந்தனையையும் முன் வைத்தது.

ஆனால் அதற்குச் சற்றும் இடம் கொடுக்காமல் மலேசிய மண்ணின் தங்கமகளாகவே ஶ்ரீ அபிராமி வலம் வரவே இந்த முன்னெடுப்பு திட்டமிடப்பட்டதாக ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.

இதற்கு மேலும் ஶ்ரீ அபிராமி அறவாரியத்துக்குக் கொடையளிக்கப்படும் நிதி, ஶ்ரீ அபிராமியின் 2030 வரையிலான அவரது அடுத்தக்கட்டத் திட்டங்களுக்குச் சேமிக்கப்பட்டு முறையாக வழங்கப்படும். ஶ்ரீ அபிராமி அறாவாரியத்துக்கு ஆலோசகராக விலங்கும் ஓம்ஸ் தியாகராஜனின் மேற்பார்வையில் இந்நிதி முறாஇயாகவும் வெளிப்படையாகவும் நிர்வகிக்கப்படும். வரவு செலவு விவரங்கள் அவ்வப்போது தமிழ் மலர் நாளேட்டில் பொது மக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படும்.

இதுவரையில் நிதியளித்தற்கான இரசீதுகள் முறையே வழங்கப்படும். கடந்த ஒரு வாரமாகப் பல்லாயிரக்கணக்கில் பொது மக்கள் நிதியளித்திருப்பதனால், அனைவருக்கும் இரசீதுகள் சென்றடைய சற்றுத் தாமதமாகும். இரசீதுகளைப் பெற விரும்பவோர் info@sreeabiraame.org எனும் மின்னஞ்சலுக்குத் தங்கலின் நன்கொடை பணப்பட்டுவாடா நகலையும் சுயவிவரங்களையும் அனுப்பிவைக்கலாம்.

ஒரு வேளை, இதற்குப் பிறகு அரசாங்கம் ஶ்ரீ அபிராமியின் விலையாட்டுப் பயிற்சி செலவை ஏற்க முன் வந்தால், பாராட்டத்தக்க அந்த முடிவுக்கு வழி விடப்படும். மேலும், ஶ்ரீ அபிராமி அறவாரியத்தின் வழி திரட்டப்பட்டப் பணம் விளையாட்டுத் துறையில் சிறப்பான அடைவுநிலையைப் பதிவு செய்யும் வேறோர் இந்தியப் பிள்ளையின் மேம்பாட்டுக்குச் செலவு செய்யப்படும் எனவும் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பதற்கேற்ப பல்லாயிரம் தூண்டுகோல்களாக அலையெனத் திரண்டு கொடையளித்தப் பொது மக்களுக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை ஓம்ஸ் தியாகராஜனும் ஶ்ரீ அபிராமியின் தந்தை சந்திரனும் தெரிவித்துக் கொண்டனர்.