ஈப்போ | 24/7/2021 :-
நேற்று இங்குள்ள ஈப்போ பாடாங் அருகே உள்ள நாசி கஞ்சா உணவகத்திற்கு உலங்கூர்தியில் வந்திறங்கி 36 உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சென்ற விவகாரம் தொடர்பில் தற்போது மலேசிய பொது வான்போக்குவரத்து நிர்வாகத்தால் CAAM விசாரிக்கப்பட்டு வருகிறது.
CAAM இன்று வெளியிட்ட அறிக்கையில், Systematic Aviation Services Sdn. Bhd. (SAS) நிறுவனத்தின் Bell 505 வகை உலங்கூர்தி இவ்விவகாரத்தில் ஈடுபட்டது குறித்தும் மலேசியப் பொது வான்போக்குவரத்து விதிமுறைகள் 2016ஐ அது மீறியுள்ளதா என விசாரிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட வகையில் அந்த உலங்கூர்தி அதன் நிறூவன ஊழியர்களால் செலுத்தப்பட்டதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஈப்போ நகராட்சி மன்றத்தின் கீழ் இருக்கும் ஈப்போ பாடாங்கில் நேற்று காலை 10.00 மணி அளவில் தரையிறங்கியதாகக் கூறப்பட்ட அந்த உலங்கூர்தி காலை 9.08 மணி அளவில் சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 11.02 மணி அளவில் சுபாங்கிற்குத் திரும்பியுள்ளதாக வான்போக்குவரத்துத் திட்டத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக CAAM குறிப்பிட்டுள்ளது.
வான் போக்குவரத்துத் துறாஇயில் ஈடுபடும் அனைவரும் CAD 2 (Rules of the Air), Chapter 3.1. Protection of Persons and Property விதிமுறைகளையும் இதரத் தொடர்புடைய விதிமுறைகளாஇயும் பின்பற்றுவது கட்டாயம் என CAAM வலியுறுத்தியுள்ளது.
தொழில்துறை – பொது மக்களின் பாதுகாப்பையும் முதன்மைப் படுத்தி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுவதை CAAM உறுதிப்படுத்தும்.
இச்சம்பவத்தை உறுதிப்ப்படுத்திய பேரா மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடாலாத்ராஷ் வாஹிட், அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் அந்த உலங்கூர்தி நிறுவனம் மீதும் தொற்று நோய்க் கட்டுப்பாடு – தடுப்புச் சட்டத்தின்கீழ் எஸ்.ஓ.பி. விதி மீறல் குறிப்பாக மாநில எல்லையை கடந்தது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறினார்.


