ஜோகூர் பாரு | 12/8/2021 :-
ஜோகூர் சட்டமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று தொடங்கியது. தேசிய மீட்சித் திட்டக் காலத்தில் சட்டமன்றக் கூட்டத்தை நடத்திய முதல் மாநிலமாக அது இருப்பதால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இக்கூட்டத்தை ஜோகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டார் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பின்னர் இஃது எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடரும்.
ஏழு நாட்களுக்கு நடக்கவிருக்கும் இக்கூட்டம் எதிர்வரும் 22/8/2021 ஆம் நாள் நிறைவடையும். இக்கூட்டத்தின்வழி அம்மாநில அரசாங்கத்தின் பொருளாதார மீட்சிக்கானத் திட்டம் குறித்தும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநில மக்களுக்கு வழங்கப்படும் உதிவைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
ஜோகூர் மாநில அரசாங்கம் தேசியக் கூட்டணியின் கீழ் 29 தொகுதிகளைக் கொண்டுள்ள நிலையில் 27 தொகுதிகள் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன.
அம்மாநில ஆட்சியில் ஜோகூர் அம்னோ 14 தொகுதிகளைக் கொண்டுள்ள வேளையில் பிரதமர் மகியாதீனின் கம்பீர் தொகுதி உட்பட பெர்சத்து 12 தொகுதிகளையும் ம.இ.கா 2 தொகுதிகள், பாஸ் 1 தொகுதி என்கிற நிலையில் உள்ளன.
இதனிடயே, எதிர்க்கட்சி வரிசையில் ஜ.செ.க 14 தொகுதிகளும், அமானா 6 தொகுதிகளும், பிகேஆர் 7 தொகுதிகளும் உள்ளன.
கடந்த 4ஆம் தேதி வரையில், ஜோகூர் மக்களுக்கான தடுப்பூசி குறித்து ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு ஆவணமாகப் பெறப்பட்டதாக ஜோகூர் மாநிலச சட்டமன்றத் தலைவர் சுஹைஸியான் கையாட் தெரிவித்தார்.
ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு 26/11/2020 முதல் 6/12/2020 வரையில் ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கூடிய போது அம்மாநில முதல்வர் டத்தோ ஹஸ்னி முகம்மட் ஜோகூர் மாநிலத்திகான 2021 வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தார்.


