கிள்ளான், மார்ச் 7-
சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும் என்ற டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் முடிவை சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றம் (எம்.பி.என்.) வரவேற்றது மட்டுமின்றி எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் கூற்று மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதிலேயே இருக்கும் என்றும் கூறியது.
அஸ்மின் அலி முதலில் தமது குறைகளைச் சரிபடுத்திக் கொள்ள வேண்டும், மக்கள் தேர்ந்தெடுத்த அரசை ஷெராட்டோன் நடவடிக்கை வாயிலாகக் கவிழ்ப்பதில் முக்கிய பின்னணிகளில் ஒருவராக அவர் இருந்துள்ளார். அப்துல் ரஷிட்டின் இந்த முடிவு அரசின் நிர்வாகத்திற்கு எந்த எதிர்மறையான விளைவையும் கொண்டு வராது, மாறாக மாநில அரசின் கொள்கை வாயிலாக மாநில ஆட்சிக்குழுவில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அணுக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஊன்றுகோலாக இருக்கும்.
இதனை அஸ்மின் அலிக்கான ஒரு நிராகரிப்பாக எம்.பி.என். கருதுவது மட்டுமின்றி இன்னும் குறுகிய காலத்தில் நிகழக்கூடிய அரசியல் அதிர்வுகள் இன்னும் அதிகமான சிலாங்கூர் பெர்சத்துவின் பலவீனங்களை அம்பலப்படுத்தி விடும் என்றும் நம்பப்படுகிறது.
எது எப்படியிருப்பினும் சிலாங்கூர் மக்கள் ஐயம் கொள்ள அல்லது கவலைப்படத் தேவையில்லை, காரணம் மாநில மந்திரி புசாரும் மாநில எம்.பி.என். தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கீழ் சிலாங்கூர் மிகவும் முன்னேற்றமடைந்த மாநிலமாக விளங்குவது மட்டுமின்றி வரும் காலத்தில் மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து மக்களின் நலனையும் பேணிக் காக்கும் என்பது திண்ணம்.
டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்
2ஆவது உதவி தலைவர்
சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். தலைமைத்துவ மன்றம்