கோலாலம்பூர், அக்.12-
நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவும் நோக்கில் மலேசியத் தமிழ் அறவாரியம் இந்த மாபெரும் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு கல்வி அமைச்சு உறுதுணையாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், 2026-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தின் கீழ் லாடாங் ஜேராம் தமிழ்ப்பள்ளி புதிதாக கட்டப்படும் என்ற பிரதமர் அன்வாரின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கம் எப்போதும் இனம், மதம் பேதமின்றி தாய்மொழிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது. புதிய பள்ளி கட்டுமானமும் அதற்கான சான்றாகும் என்று கல்வி துணையமைச்சர் வலியுறுத்தினார்.
அறவாரியத்தின் தலைவர் எம். மனோகரன் தனது உரையில், “நாம் கோயில்களில் செலவிடுவதைவிட கல்விக்காக அதிகம் முதலீடு செய்ய வேண்டும். கல்வியே நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் மிகப்பெரிய சக்தி என்று தெரிவித்தார். மேலும், கல்வி துணையமைச்சரின் பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், அறவாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் நிதி திரட்டும் ஏற்பாட்டு தலைவர் இரா. மதன்ராஜ், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், குறிப்பாக நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
“திரட்டப்பட்ட நிதி முழுவதும் இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும். கல்வியே சமூக முன்னேற்றத்தின் திறவுகோல் என்று அவர் தெரிவித்தார்.