கோலாலம்பூர், அக். 11-
தலைநகர் லெபோ அம்பாங்கின் பெயரை முன்பு இருந்தது போலவே “செட்டித் தெரு” என்று நிலைத்திருக்கச் செய்யும்படி அரசாங்கத்திடம் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்தப் பகுதியை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலேஹா “செட்டித் தெரு” என்று பெயரிட வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார்.
லெபோ அம்பாங் இந்திய பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது சரவணன் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
இக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று டாக்டர் சலேஹா தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
மலேசிய இந்தியர்கள் 3 குழுக்களாக மலேசியாவிற்கு வந்தார்கள் என்பது வரலாறு.
முதலாவது தொழில்முறை நிபுணர்கள், இரண்டாவது தோட்டத்தில் பணிபுரிய வந்தவர்கள், மூன்றாமவர்கள் வணிகர்கள்.
குறிப்பாக, நகரத்தார் சமூகத்தினர் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கிய இடம்தான் இந்த லெபோ அம்பாங். இந்த வரலாறு நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அந்தந்த இடத்தில் அதன் பூர்வீகமும், தனித்துவமும் நிலைத்திருக்க வேண்டும் என்று சரவணன் வலியுறுத்தினார்.
உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல் பாடல்களோடு தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி கலைகட்டியது.