சுங்கை புலோ, அக்டோபர் 12:
வரும் தீபாவளியை முன்னிட்டு, சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ’ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்கள், சமூக அக்கறையின் அடையாளமாக “வணக்கம் மடானி தீபாவளி பாக்குள் கசிஹ் (உணவு கூடை)” திட்டத்தின் கீழ் 3,000 இந்திய பி40 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.இந்தத் திட்டம், சுங்கை புலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் மற்றும் அமானா இக்திஹார் மலேசியா (AIM) இணைந்து முன்னெடுத்த “வணக்கம் மடானி” சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கம் சமூக நலனை மேம்படுத்தி, உள்ளூர் மக்களின் பொருளாதார வலிமையை உயர்த்துவதாகும்.
“இந்த உதவி நமது இந்திய சமூகத்திற்கு இவ்வருட தீபாவளியில் ஒரு சிறிய ‘வெளிச்சம்’ தரும் என்று நம்புகிறேன்,” என்று தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சரான டத்தோ’ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
“இந்த நலத்திட்டம் வெறும் உதவியாக அல்ல, அது அன்பு, ஒற்றுமை மற்றும் அரசின் அக்கறையை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு உணவு கூடையும் (பாக்குள் கசிஹ்) உணவுப் பொருட்களை மட்டும் நிரப்புவதில்லை; அது நம்பிக்கை மற்றும் உற்சாகத்தையும் நிரப்புகிறது. தீபாவளி என்பது உண்மையான உள்ளத்திலிருந்து பிறக்கும் வெளிச்சம்.”
இந்நிகழ்ச்சி இன்று சுங்கை புலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மைய தளத்தில் நடைபெற்றது.
தீபாவளியை முன்னிட்டு, உணவு கூடை வழங்கலுடன் சேர்த்து, கோத்தா டாமன்சாரா மற்றும் பாயா ஜாராஸ் பகுதிகளில் மடானி கூட்டுறவு விற்பனை சந்தை (Madani Cooperative Sale Fair) 50% வரை தள்ளுபடியில் நடத்தப்பட்டதாகவும் ரமணன் தெரிவித்தார்.
பாக்குள் கசிஹ் உணவு கூடையில் அரிசி, எண்ணெய், முருக்கு மாவு, அதிரசம் மாவு, பருப்பு, காரப்பொடி, எள்ளெண்ணெய், பானக் கலவை மற்றும் பிற தீபாவளி சமையல் பொருட்கள் அடங்கியிருந்தன.
இந்த நலத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய தன்னார்வலர்கள், அமானா இக்திஹார் மலேசியா (AIM) மற்றும் அரசுத் துறைகளுக்கு தனது நன்றியையும் டத்தோ’ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி, “மதானி பொருளாதாரம் மக்களிடமிருந்து, மக்களுக்காக” என்ற அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.