அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் மீது பிரதமரிடம் பேச்சு நடத்துவேன்! -முன்னாள் அமைச்சர் சிவகுமார்

73

கோலாலம்பூர், ஏப்.20-

இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் மூன்று இந்திய பாரம்பரிய தொழிற்துறைகளுக்கான அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக முன்னாள் மனித வள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.

“சிகையலங்காரம், ஜவுளி மற்றும் நகை ஆகிய மூன்று தொழிற்துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அரசாங்கம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. ஆனால், இன்று வரை வெறும் 300 அந்நிய தொழிலாளர்கள் மட்டுமே தருவிக்கப்படுள்ளனர். இதனால் இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இதற்குத் தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட துறைகள் என்னைக் கேட்டுக் கொண்டன. இதன் அடிப்படையில் பிரதமரைச் சந்தித்துப் பேச நான் திட்டமிட்டுள்ளேன்” என்றார் அவர்.

“இந்தத் தொழிற்துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், இது இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை” என்றார்.

ஆகையால், இவ்விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்று இதற்குத் தீர்வு காண என்னால் இயன்ற முயற்சிகளை நிச்சயம் மேற்கொள்வேன்” என்று இங்கு தலைநகர் சீன அசெம்ளி மண்டபத்தில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (மிண்டாஸ்) 23ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைகளை மூடும் அளவுக்கு வியாபாரிகள் மோசமான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர். வியாபாரிகளின் இத்தகைய நிலையை பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும். இப்பிரச்னைக்குத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தாம் மேற்கொள்ளப் போவதாக பலத்த கரவொலிக்கிடையே சிவகுமார் குறிப்பிட்டார்.

அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறைகளின் பொறுப்பாளர்களுடன் தாம் சந்திப்பு நடத்தவிருப்பதாக அவர் சொன்னார்.