மஇகா தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்! மஇகா மத்திய செயலவைக்கு போட்டியிடும் எம்.காந்தன் கூறுகிறார்

220

கோலாலம்பூர், ஜூன் 25-

இந்திய சமூகம் எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் விலாயா மாநில தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தான் தயாராக இருப்பதாக ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் எம்.காந்தன் தெரிவித்தார்.

“மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 45 பேர் போட்டியிடுகிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

நாட்டில் நமக்கும் சம வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்தில் நமக்கு வலுவான குரல் இருப்பதை உறுதி செய்ய நானும் முன் வந்திருக்கிறேன். மஇகாவில் நீண்ட காலம் அயராது பணியாற்றிய எனது அருமை பாட்டி கமலாட்சி ஆறுமுகம் ஆசியோடு நான் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். அவர் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் மஇகா மகளிர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினராக இருந்து அளப்பரிய சேவை ஆற்றினார்.

எனது அரசியல் பயணத்திற்கு ஒரு முன்னோடியாக மஇகாவும் என் பாட்டியும் விளங்குகிறார்கள். என் கல்விக்கு கட்சி உதவியதை நான் என்றும் மறக்க மாட்டேன். எனது பாட்டி கமலாட்சி ஆறுமுகம் அவர்களால் அரசியலில் முழு மூச்சாக களம் இறங்கி இருக்கிறேன். கட்சி மற்றும் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

“என் பாட்டி கமலாட்சி ஆறுமுகம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மஇகாவுக்கும் எனது இந்திய சமுதாயத்தின் நல்வாழ்விற்கு பங்களிப்பதில் எனது உண்மையான அர்ப்பணிப்பு இருக்கும்” என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அர்த்தமுள்ள ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும். இந்திய சமுதாயத்தின் குரல்களுக்கு செவி சாய்த்து அவற்றுக்கு தீர்வு காண நானும் உறுதி பூண்டிருக்கிறேன்.

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் விலாயா மாநில தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் என்னால் முடிந்த அளவுக்கு இந்திய சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பேன்.

“மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டிடும் என்னை பேராளர்கள் வெற்றி பெற செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றிணைந்து மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றினால் நம் சமுதாயம் மேன்மேலும் முன்னேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் மேலும் விவரித்தார் .