காஜாங், அக். 11-

கடந்த வியாழக்கிழமை, காஜாங் சிறைச்சாலையில் மலேசிய இந்து சங்கம், மலேசிய சிறைத் தலைமையகத்தின் கொள்கைப் பிரிவு தலைமை இயக்குநர் முகமது ரோசிடெக் பின் மூசாவுடன் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் மாநில தலைமைப் பயிற்றுநர்கள் மற்றும் தேசிய உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் வழிக்காட்டல் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதில் உள்ள சவால்கள், தலைமைப் பயிற்றுநர்களின் பரிந்துரைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தற்போதைய பிரச்சினைகளை முதலானவை அதில் விவாதிக்கப்பட்டன.

ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலின் விளைவாக, பல சிக்கல்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன, மேலும் சில சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என முகமது ரோசிடெக் உறுதியளித்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் தேசிய சிறைச்சாலை ஒருங்கிணைப்பாளர் அழகந்திரன் சிவசாமி கூறுகையில், இந்து சங்கத்தின் இத்தகைய முயற்சிகள் கைதிகளை நெறிப்படுத்துவதில் ஒரு மைல் கல் எனவும், மிகவும் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக அது விளங்குவதாகவும் புகழ்ந்துரைத்தார்.

“நன்னெறி வகுப்புகள், வருடப்பிறப்பு மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவை இந்து கைதிகளுக்கு சிறைத் தண்டனைக்குப் பிறகு ஒழுக்கமான வாழ்க்கை வாழ வழிவகுக்கின்றன. இந்த முயற்சிகள் மேலும் தொடர வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த தலைமைப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, தங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்து சங்கத்தின் இத்தகைய முயற்சிகள், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு பெரும் பங்களிப்பை வழங்குவதாக சிறைத் துறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு, மலேசிய இந்து சங்கத்தின் சமூக நல முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது, மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒத்துழைப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.