வீடற்றவர்களை அரவணைத்த விஜய் ரசிகர்கள்

கோலாலம்பூர், ஜூலை 17-

குடும்பங்களை விட்டு கோலாலம்பூர் மாநகரத்தின் மையப் பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் வீடற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்துள்ளோம் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஷர்மாநாத் ராமன் கூறினார். 

அண்மையில் உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் அவரின் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடினர். விஜய்யின் ரசிகர்கள் என்ற முறையில், நாங்களும் அவரைப்போலவே பயன்தரக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நமது குழு உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டம் நடத்தி, கோலாலம்பூரில் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிக்கும் வீடற்றவர்களுக்கு போர்வை தேவைப்படுகிறது என்று கேள்விப்பட்டோம். அதன் வாயிலாகத்தான் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினோம் என்றார் அவர். 

விஜய் பிறந்தநாள் மட்டுமின்றி, நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தையும் சேர்த்துக் கொண்டாடினோம். சாலையோரத்திலும் கட்டடங்களுக்குக் கீழ்த்தளத்திலும் உள்ளவர்களை அணுகியபோது, போர்வை கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அதோடு, நோன்புப் பெருநாள் காலகட்டமாகவும் இருந்ததால், நோன்புத் துறப்பு நேரத்திற்குப் பின்னர் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

மலேசியாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் இளைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். நமது அமைப்பு இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் ஆசிபெற்று மலேசியாவில் முதன்மை இயக்கமாக செயல்படுகிறது. விஜய் அவர்களின் ஆசியுடன் மலேசியாவில் செயல்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

இன்றைய காலகட்டத்தின் இளைஞர்களின் மீது அள்ளி வீசப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. அதேவேளை, இளைஞர்களை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாகவும் பெற்றோர்கள் திகழ்வதில்லை. எங்களைப் பொறுத்தவரை, விஜய் என்பவர் சினிமா நடிகர் மட்டும்மல்லர். அவர்கள் இளைஞர்கள் ஹீரோ. இந்தச் சூழல் மாற்ற இயலாத ஒன்று. ஆனால், நாம் எதை எப்படி, எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது எனவும் ஷர்மா சொன்னார்.