பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15-
பெரிக்காத்தான் நேஷனலில் ஒரு பங்காளிக் கட்சியாக இருக்கும் பாஸ், கூட்டணி சம்பந்தமான கொள்கை மற்றும் முக்கிய பிரச்சினைகளில் முடுவெடுப்பதில் சம பங்கு அதிகாரம் வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இதுநாள் வரை எல்லா முக்கிய விவகாரங்களிலும் தலையாய கட்சியாக இருக்கும் முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்துவே எல்லா முடிவுகளையும் எடுத்து வந்துள்ள நிலையில், அம்மாதிரியான செயல்பாடுகள் இனிமேலும் அனுமதிக்க முடியாது என்று பாஸ் கட்சியின் தலைமைத்துவம் உறுதியாக குறிப்பிட்டுள்ளது.
ஆகையால், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தலைமைத்துவ மன்றம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில், உறுப்புக் கட்சிகள் அனைத்திற்கும் சமமான அதிகாரம் வழங்கப்பட்டு, முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் பங்கு வழங்கப்பட வேண்டுமென பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கூட்டணியில் பாஸ் கட்சிக்கே அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக, பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஸ் கட்சிக்கே அதிகாரமும், முக்கியத்துவமும் தரப்பட வேண்டும்.
காரணம், பாஸ் கட்சியிலும் பிரதமர் பதவிக்குத் தகுதியான தலைவர்கள் இருப்பதாகவும் அக்கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.
-பொன் முனியாண்டி