ஆட்சியில் ஊழலை ஒழிப்போம் என்ற அறைகூவல் விடுத்ததன் காரணமாகவே 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியால் ஆட்சியை அமைக்க முடிந்தது.
ஆனால், தற்போது பிரதமர் அன்வாருக்கு நெருக்கமானவர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் செயலானது அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமையும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரபிஸி ரம்லி எச்சரித்துள்ளார்.
அண்மையில், சபா மாநிலத்தில் 70,000 ஹெக்டர் நிலப் பகுதியில் சுரங்கப் பணியை மேற்கொள்ள அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ ஃபார்ஹாஸ் வாஃபா சல்வடோரின் நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்ட செயலானது சபாவில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அன்வார் பிரதமரான பின்னர் இந்த ஃபார்ஹாஸின் வர்த்தக நடவடிக்கைகளும் அரசின் வர்த்தக ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் பெரும் வெற்றியை அடைந்திருப்பதாகவும் அதில் அன்வார் மறைமுகத் தொடர்பு வைத்திருப்பதாகவும் வதந்தி உலவுகிறது.
அம்மாதிரியான குற்றச்சாட்டுகளைப் பிரதமர் அன்வார் மறுத்திருந்தாலும் இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து உள்ளதால், ஊழலை ஒழிக்க மார்தட்டும் அவர், உடனடி நடவடிக்கையில் இறங்கி தம்முடைய மற்றும் கட்சியின் நற்பெயரைக் காக்க வேண்டுமென்றும் ரபிஸி ரம்லி அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை என்றால் அடுத்த பொதுத்தேர்தலில் பிகேஆர் ஆட்சியை இழக்க நேரிடும் என்றும் ரபிஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-பொன் முனியாண்டி