கோலாலம்பூர்,ஜூலை 26-

ஒரு பிரதமரை வீதி ஆர்ப்பாட்டங்கள் வழி மாற்றுவதை விட ஜனநாயக முறையில் மாற்றுவதுதான் நாகரீகமான செயல் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் வலியுறுத்தினார்.

வீதி ஆர்ப்பாட்டங்களினால் விளையப்போவது எதுவுமில்லை என்றும் பிரதமர் அன்வாரை பதவிலிருந்து அகற்ற அவர் மீது ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து, அதன் மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதே நியாயமான நடைமுறையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை மதிப்பவர்களாக இருந்தால், நாடாளுமன்றத்தில் அன்வாரை அகற்ற குரல் கொடுத்திருக்க வேண்டுமே ஒழிய வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாதென்றும் அவர் நினைவுறுத்தினார்.

பெட்ரோல் மற்றும் மின்சார கட்டணக் குறைப்பு, பல்வேறு உதவித் தொகை வழங்கல், வாழ்க்கைச் செலவின குறைப்பு யாவும் மடானி அரசினால் வழங்கப்படுவதை புறந்தள்ளி, மக்கள் விலைவாசியினால் அவதிக்குள்ளாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்வதாக சைஃபுடின் நசுத்தியோன் குற்றம் சாட்டினார்.

-பொன் முனியாண்டி