கோலாலம்பூர், ஜூலை 26- தலைநகர், டத்தாரான் மெர்டேக்காவில் எதிர்க்கட்சியினரால் இன்று நடத்தப்பட்ட ‘அன்வார் பதவி விலக வேண்டும்’ என்ற பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்களோடு முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அன்வார் இப்ராஹிமிற்கு மக்களின் ஆதரவு பெரியளவில் குறைந்துள்ளதால், அவர் சுயமாக பதவியிலிருந்து விலகுவதே விவேகமான செயலாக இருக்கும் என மகாதீர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மக்களின் ஆதரவு இன்னமும் இருப்பதாக அன்வார் மார் தட்டாமல், தாம் 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகியது போலவே அவரும் பதவி விலக முன் வரவேண்டுமென்று அறிவுறுத்தினார்.
மக்களின் ஆதரவு குறைந்தால், அதற்கு அடிபணிந்து விலகுவதே ஒரு தலைவருக்கான அழகு என்றும் அவர் அன்வாரை நகையாடினார்.
22 ஆண்டுகள் பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் பதவி விலக மறுத்து சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த மகாதீர், 15ஆவது பொதுத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சுஹைமி அப்துல்லாவிடம் தோல்வி அடைந்தார்.
எனினும், 100 வயதைக் கடந்த பின்னரும் அவர் அரசியலில் பெயர் போட நினைப்பது குறித்து நகைச்சுவையாகப் பேசப்படுகிறது.
-பொன் முனியாண்டி