கோலாலம்பூர், ஜூலை 26-

இன்று டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற ‘அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியானது’ அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்றே பொருள் கொள்ளப்பட வேண்டுமென பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

அன்வாருக்கு எதிராக இன்று திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோரின் எண்ணிக்கையை மதித்து அன்வார் பதவி விலகுவதே நியாயமாகும் என்றும் அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அன்வாருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்காது என்றும் மாறாக இன்று பேரணியில் கலந்து கொண்டோரின் எண்ணவோட்டமே அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீரமானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தக்கியுடின் ஹசான் கூறினார்.

இதனிடையே, ஜனநாயக முறையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அல்லது பொதுத் தேர்தலின் மூலம் அன்வாரை பதவியிலிருந்து அகற்ற முடியாது என்பதால் தக்கியுடின் இத்தகைய நகைப்பிற்குரிய வழியை நாடியுள்ளது அவரின் அறியாமையை வெளிக்காட்டுவதாகக் குறை கூறப்படுகிறது.

-பொன் முனியாண்டி