கோலாலம்பூர், ஜூலை 28-

பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியானது பொது நலத்தைப் புறந்தள்ளி, அரசியல் லாபத்திற்காகவும் ஜனநாயகத்திற்கு மாறாகவும் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்திலும் நிகழ்த்தப்பட்டதாகப் பொருள் கொள்ளப்பட வேண்டும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப மடானி அரசு சீர்திருத்தங்களைக் கொண்டு வரத் தவறியுள்ளதாகவும், வாழ்க்கைத் தரத்தையும் விலைவாசியையும் வீட்டு கட்டுமான விலையையும் சுகாதாரக் கேடுகளையும் போக்குவரத்துப் பிரச்சினைகளையும் கட்டுக் கொண்டுவர மடானி அரசு தவறிவிட்டதாகப் பேரணியில் கலந்து கோண்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவினத்தால் குடும்பங்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்து வருவதாகவும் மாணவர்களில் பலர் பள்ளிக்கு மட்டம் போடுவதாகவும் கூறப்பட்டது.

மேற்கண்ட பிரச்சினைகளைக் களையை அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினாலும் உலகளாவிய பிரச்சினைகளால் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவின பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்பட முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், உண்மையாக மேற்கண்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்தப் பேரணியை நடத்தினார்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர், ஆட்சியை நடத்தியபோது புனிதர்களாக இருந்ததில்லை. அவர்களின் காலத்தில் உழல் தலைவிரித்தாடியதோடு குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அதிகபட்ச சலுகைகள் காட்டப்பட்டு, அரசுப் பணம் களவாடப்பட்டு, அவர்கள் மீது இன்னமும் வழக்குகள் நிலுவகையில் இருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

மடானி ஆட்சியின் தவணைக் காலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், இந்தப் பேரணியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் களைய பிரதமர் அன்வார் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வவதாக கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.

-பொன் முனியாண்டி