கோலாலம்பூர், ஜூலை 28-

தலைநகரில் கடந்த சனிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி பொதுமக்களின் நன்மையைக் கருதி மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக அது புறக்கதவு வழியாக ஆட்சி அதிகாரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டதாக டத்தோ டாக்டர் விநோத் சேகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேரணியில் 30,000 பேருக்கு மேல் வந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் வேளையில், 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பொய்ப் பிரச்சாரம் எடுபடவில்லை.

அதில் நாட்டின் பல்லின மக்களும் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், பெரும்பாலும் பாஸ், மற்றும் பெர்சத்து கட்சி உறுப்பினர்களே காணப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் அனைவரும் தாங்களாகவே அங்கு வரவில்லை. மாறாக கட்சிகளினால் வற்புறுத்தப்பட்டு, சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டே அழைத்து வரப்பட்டதாகத் தெரிய வருவதாக விநோத் சேகர் தெரிவித்தார்.

அன்வாரை ஆட்சியிலிருந்து அகற்ற ஜனநாயக வழியாக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைக் கொண்டுவந்து அவரை அகற்ற வாய்ப்பு இருக்கும்போது, பேரணியை ஏற்பாடு செய்திருக்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை எந்தப் பயனையும் அடைய முடியாது.

இந்தப் பேரணியானது உணர்ச்சிக்கு வழிவகுத்து, அச்சத்தை உருவாக்கி, இன அடையாளத்தை பிரச்சினைக்குள்ளாக்கி, மக்களைக் குழப்பி நாட்டில் அமைதியின்மையை உருவாக்கவே நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

நாடு பொருளாதார, வாழ்க்கைச் செலவின, கல்வி உருமாற்றம், சுற்றுச் சூழல் சீர்கேடு, சுகாதாரக் கேடு போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கும் வேளையில், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் மக்களின் நன்மைக்காக கூடிப் பேசி பயனான திட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் நாடக நடிகர்களாக மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, ஆட்சியைக் கவிழ்த்து வெறியாட்டம் போடக் கூடாது என பெத்ரா குழும தலைரும் வைபஸ் இணையதளத்தின் நிர்வாகியுமான வினோத் சேகர் கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி