.கோலாலம்பூர், ஜூலை 30-
ஒரு காலத்தில் தேசிய முன்னணி ஆட்சியில் பல அமைச்சர் பதவிகளைப் பெற்று வலுவான கட்சியாக விளங்கிய மஇகா தற்போது தாப்பா தொகுதியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் வாக்குறுதி கொடுத்தது போன்று மஇகாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அது தேசிய முன்னணியின் கூட்டணியில் வேண்டாத விருந்தாளி போல நடத்தப்படுவதாகக் கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
கட்சித் தலைவர்கள் சிலர், மஇகா தேசிய முன்னணியில் இருந்து விலகி, தனிக் கட்சியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து, அது விலகினால், மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் இறுதியில் அக்கட்சி காணாமல் போக வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிகேஆர் தொடங்கப்பட்டு பல்வேறு தடங்கல்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு 10 ஆண்டு காலத்திற்குப் பின்னரே அது பல்லினங்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதை ஒரு பாடமாக மஇகா தலைவர்கள் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து தேசிய முன்னணியிலேயே இருந்து முன்பு போல பிரகாசிக்க முயலவேண்டுமென்று அரசியல் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
தேசிய முன்னணியில் இருந்து விலகினால், மஇகாவிற்கு இனி வரும் காலம் இருண்ட காலமாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
-பொன் முனியாண்டி