கோலாலம்பூர், ஜூலை 30-
பக்காத்தான் ஹராப்பான் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் வென்றால், நாட்டில் அமலில் இருக்கும் நெடுஞ்சாலைக் கட்டணம் முற்றாக ரத்து செய்யப்படும் என்று அன்வார் இப்ராஹிம் வெற்று வாக்குறுதிகளை அளித்ததாக கெராக்கான் தலைவர் டாக்டர் டோமினிக் லாவ் குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தலில் அவர் வென்றாலும், அவரின் வாக்குறுதி கானல் நீராகத்தான் இருக்கும் என்றும் நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் அவரின் ஆசியினால் கோடிக்கணக்கான லாபத்தைத் தொடர்ந்து அனுபவிப்பது நிச்சயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பொதுப்பணித் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி அது பற்றிக் கூறும்போது, நெடுஞ்சாலைக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்தால், நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க அரசுக்கு கோடிக் கணக்கான நிதி தேவைப்படும் என்று அறிவித்த பின்னர், டோமினிக் லாவ் மேற்கண்ட தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்வாரின் வாக்குறுதிகள் யாவும் அபாண்டமான வெற்று, பொய் வாக்குறுதிகள் என்றும் அவற்றை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தும், பொதுத்தேர்தலில் மகத்தான அறுவடையை அனுபவிக்கவே அவற்றை வழங்கியிருப்பதாக டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.