கோல கங்சார், ஜூலை 31-
மலேசிய சோஷலிசக் கட்சியின்(பிஎஸ்எம்) 27ஆவது தேசிய பேராளர் மாநாடு ஆளும் மடானி அரசுக்கு 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இம்மாநாடு ஜூலை 25-27ஆம் தேதிகளில் பேராக், கோல கங்சாரில் நடைபெற்றது.
இந்த மூன்று நாள் பேராளர் மாநாட்டில் சுமார் 150 கட்சிகளின் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
இப்பேராளர் மாநாடானது இரு தனி அமர்வுகளாக நடைபெற்றது.
அவற்றில் ஓர் அமர்வில் மலேசிய சோஷலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு, சோசலிச மாணவர் கூட்டமைப்பு மற்றும் மலாயா பல்கலைக்கழக இளைஞர் மன்றம் ஆகியவை ஒன்றிணைந்தன.
இவ்விளைஞர் கூட்டமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் மலேசியாவில் பொதுவுடைமை நோக்குடைய மூன்றாவது அரசியல் அலை உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கை மையமாகக் கொண்டு ஆய்வரங்கம் நடைபெற்றது.
இதில் மூன்றாவது அரசியல் அலை உருவாக்கத்தில் இளைஞர்களின் ஆக்ககரமான ஈடுபாடு, அரசியல் அறிவு, பகுப்பாய்வு மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கான நடப்பு சட்ட விதிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இரண்டாவது அமர்வானது பி.எஸ்.எம்மின் தேர்தல் உத்தியை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
பி.எஸ்.எம்மின் தேசியப் பொருளாளரான சோ சூக் ஹ்வா, அரசியல் ஆய்வாளரான வோங் சின் ஹுவாட் மற்றும் மூடா கட்சியின் பேராக் மாநில தலைவரான விகேகே ராஜசேகரன் ஆகிய இருவருடன் இந்த ஆய்வரங்கம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்காளர்களை மையமாகக் கொள்வதைக் கடந்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் மூன்றாவது அலையை எழுப்புவதில் இக்கட்சியின் பங்களிப்பை வலியுறுத்தும் வண்ணம் இந்த ஆய்வரங்கம் அமைந்தது.
மலேசிய சோஷலிசக் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் நடப்பு மடானி அரசாங்கத்திடம் 21 அம்சங்கள் கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .இவ்வாண்டின் கருப்பொருளான “மூன்றாம் அரசியல் அலையே, நமது பலம்!” என்ற முழக்கத்துடன் இக்கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஒரு நிறைவை நாடியது.