கோலாலம்பூர்,ஆக.17-
பல்லாண்டு காலம் தேசிய முன்னணியில் பங்காளிக் கட்சியாக செயல்பட்டு வந்த மஇகா அண்மைய காலமாக ஒதுக்கப்பட்டு வருவதை அடுத்து, அது பெரிக்காத்தான் நேஷனலோடு இணைந்து எதிர்கால போராட்டங்களைத் தொடர வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய முன்னணி மஇகாவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஆட்சியில் அங்கம் வகிக்கும் வகையில் பொறுப்பு எதனையும் வழங்காமல் இருட்டடிப்பு செய்து வருவதை அடுத்து கெடா, பேரா மற்றும் பினாங்கு மாநில மஇகா தொகுதிகள் தேசிய முன்னணியிலிருந்து விலகி, வேறு கூட்டணியுடன் கூட்டு சேர நெருக்குதல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோத்தா திங்கி மஇகா பேராளர் மாநாட்டில் உரையாற்றிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், தற்போதைய நிலையில் அரசியலில் தொடர, மஇகா பெரிக்காத்தான் நேஷனலுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதாகவும் அது பற்றி நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அவர் சொன்னார்.
மஇகாவின் எதிர்கால நலனை முன்னிட்டு மேல்மட்ட தலைவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும் அந்த முடிவை கட்சியின் உறுப்பினர்கள் வரவேற்று ஆதரவு தருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி