கோலாலம்பூர்:

அடுத்தாண்டு மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் RM50,000 மானியம் வழங்கவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த சிங் டியோ தெரிவித்தார்.

இன்று ஜாலான் ஈப்போவிலுள்ள சீன உணவகத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் ஊடகங்கள் மலேசிய சமூகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் முக்கிய குரலாக உள்ளன. தமிழ் ஊடகங்களும் மற்ற மொழி ஊடகங்களுடன் இணைந்து மலேசிய சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் செயல்படுகின்றன.

அரசு, எல்லா மொழி ஊடகங்களின் வளர்ச்சிக்கும் சமமான ஆதரவு அளிக்கும் என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வாண்டு தீபாவளி விருந்தை சிறப்பாக நடத்த நிதி உதவி வழங்கிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன், ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு, ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேன் கந்தா உட்பட பல சிறப்பு பிரமுகர்கள், மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.