கோலாலம்பூர், செப். 7-
மின்னல் பண்பலையின் மற்றொரு பிரம்மாண்டம் “பிந்தாங் மின்னல் 2025” நிகழ்ச்சியின் முதல் நிலை வெற்றியாளராக 10,000 வெள்ளி பரிசைத் தட்டிச் சென்றார் அபிஷேக பிரியன்.
இவரையடுத்து, உன்னி தேவன் இரண்டாம் நிலை வெற்றியாளராகத் தேர்வானார். இவர் 7,000 வெள்ளி பரிசு தொகையைப் பெற்றார்.
தேரன்ஸ் தாஸ், திரேசா இருவரின் விறுவிறுப்பான அறிவிப்பில் மலர்ந்த “பிந்தாங் மின்னல் 2025” நிகழ்ச்சியில் 5,000 வெள்ளி பெற்று மூன்றாம் நிலைக்குத் தேர்வானார் தேஷாலன்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் நீதிபதிகள் சிறப்பு பரிசை நவீனா வென்றார்.
இதர போட்டியாளர்களான ஆரோன் தோமஸ், கண்மணி இருவரும் ஆறுதல் பரிசைப் பெற்றனர்.
இளைஞர்களிடையே பாடும் திறனை அடையாளம் காணும் பொருட்டு மின்னல் எஃப்எம் இன்னொரு பிரமாண்டம் “பிந்தாங் மின்னல் 2025” நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தது.
தரமான மற்றும் உண்மையான கலை ஆர்வம் கொண்ட இளைஞர்களை சிறந்த பாடகர்களாக உருவாக்கும் மேடையாக ‘’பிந்தாங் மின்னல் ” திகழ்கிறது.
அவ்வகையில் இவ்வாண்டு முதன் முறையாக மின்னல் எஃப்எம் 5 மாநிலங்களில் களம் இறங்கி குரல் தேர்வு நடத்தியது.
மே 17 ஆர்டிஎம் நெகிரி செம்பிலான் , மே 2 4ஆர்டிஎம் பினாங்கு , மே 31ஆர்டிஎம் பேராக் , ஜூன் 14ஆர்டிஎம் பகாங் , ஜூன் 21 ஜிஎம் பேரங்காடி கிள்ளான் என மின்னல் எஃப்எம் நடத்திய குரல் தேர்வில் அதிகமான இளைஞர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நேரடியாக குரல் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் சமூக வலைத்தளத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைத் துறையில் பரந்த அனுபவம் உள்ள நீதிபதிகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வெற்றியாளர்களில் 6 போட்டியாளர்கள் கடந்த ஆகஸ்ட்டு 2ஆம் நாள் நடைபெற்ற அரை இறுதி சுற்றிலிருந்து இறுதி சுற்றுக்குத் தேர்வாயினர்.