கோலாலம்பூர், அக் 19 – இசையமைப்பாளர் அருள் ஆர்.கே இசையில் மலர்ந்த ‘ரசகுல்லா ரதியே’ பாடல் வீடியோ பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பங்கோங் 1 பீனாஸில் வெளியீடு கண்டது.
வெளிப்புற காட்சி அமைப்புடன் கூடிய இந்த வீடியோவை டத்தோ டாக்டர் ஜெயப்பிரகாசம் வெளியீடு செய்தார்.
ஆனந்தா ராஜாராம் – திவ்யா வேகன் ஜோன் ஆகிய இருவரும் பாடிய இப் பாடலுக்கு நடனக் கலைஞர் சோலமன் தலைமையில் ஹரிஸ் – ஷேரன் மில்லினியம் நடனக் குழுவினர் விறுவிறுப்பான நடனத்தை வழங்கினர்.
இதனிடையே, இந்தப் பாடல் தயாரிப்பு , அதன் இசை மற்றும் நடன காட்சி வீடியோ தயாரிப்பில் அருள் ஆர்.கே மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட கலைஞர்களின் கடுமையான உழைப்பு தெரிவதாக பாடல் தொடர்பான வீடியோவை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றியபோது டாக்டர் ஜெயப்பிரகாசம் தெரிவித்தார்.
இப்பாடலை வெளியிட்டதன் மூலம் உள்ளூர் கலைஞர்களுக்கு பெருமையை அருள் ஏற்படுத்தியுள்ளார்.
அவர் தொடர்ந்து மேலும் பல படைப்புகளை வெளியிட வேண்டுமென ஜெயப்பிரகாசம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஏற்புரை வழங்கிய அருள் ஆர்.கே இந்தப் பாடல் தொடர்பான வீடியோ தனது 5ஆண்டுகால உழைப்பு என்றார்.
இப்பாடல் காட்சி சிறப்பாக வெளிவருவதற்கு உதவிய இசை பொறியியலாளர் தியாகு முருகேசு, தனது சகோதரி சங்கீதா, தந்தை ஆரோக்கியசாமி உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.