கோலாலம்பூர்:
நாட்டின் நிர்வாக மையமான புத்ராஜெயாவில் உள்ள ஒரே ஓர் இந்து ஆலயமான ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம், அங்குள்ள ஆயிரக்கணக்கான இந்து மதம் சார்ந்த பொதுச்சேவை ஊழியர்களின் ஆன்மிகத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய முக்கியத் தலமாக விளங்குகின்றது.
ஆனால், 2017 ஆம் ஆண்டு முதல் நிதிப் பற்றாக்குறையால் இந்த ஆலயத்தின் கட்டுமானம் முழுமையடையாமல் தேக்கமடைந்துள்ளது.
இந்நிலையில், இஸ்லாம் அல்லாதவர்களின் வழிப்பாட்டு தலங்களுக்கான சிறப்பு நிதி – (RIBI)-யிலிருந்து உடனடியாக நிதி ஒதுக்கீடு அவ்வாலயத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், நுட்பப் பிரச்சினைகள், அனுமதிகள் உள்ளிட்ட அனைத்து இடையூறுகளையும் நீக்கி, மடானி அரசு விரைந்து உதவ வேண்டும் என டி.ஏ.பி. கட்சியைச் சேர்ந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இது பட்ஜெட்டில் வெறும் எண்கள் மட்டுமல்ல – இது மக்களின் கௌரவமும் நம்பிக்கையும் சம்பந்தப்பட்ட விவகாரம். உண்மையான, உள்ளடக்கிய, நீதியான மடானி நாட்டைக் கட்டமைக்க விரும்பினால், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய துணிச்சலான நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டும்.
இந்து அரசுப் பணியாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்தப் புனிதத் தலத்தை விரைவில் முழுமை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் வீ.கணபதிராவ் எதிர்பார்ப்பை முன்வைத்தார்.


